தாராபுரம்,
தாராபுரத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகள் குழு உள்ளிட்டோர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வனுக்கு, திண்டுக்கல்லிருந்து கலப்பட எண்ணெய் வகைகள் வேன் மூலம் தாராபுரம் பகுதியில் விற்பனைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அதிகாரிகள் குழுவினர் பேருந்து நிலையம் அருகில் வேகமாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது திண்டுக்கல், மாடர்ன்நகர் பகுதியில் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து, 7க்கும் மேற்பட்ட பிரபல எண்ணெய் நிறுவனங்களில் பெயரில், சில எழுத்துக்களை மாற்றி பேக்கிங் செய்யப்பட்ட கடலை எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலும், நல்லெண்ணெய்க்கு பதிலாக பாமாயிலும் இருப்பது தெரியவந்தன. இதையடுத்து எண்ணெய் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அதிகாரிகள் குழுவினர் அனுப்பியுள்ளனர். இச்சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய்யை வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது: மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 1 மாதமாக நடந்த சோதனையில் இதுவரை சுமார் 15ஆயிரம் லிட்டர் கலப்பட போலி எண்ணெய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வு முடிவுகள் வந்த பிறகு கலப்பட எண்ணெய் தயாரிப்பாளர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தாராபுரத்தில் நடந்த சோதனையில் வேன் ஓட்டுநர் சக்திவேலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கலப்பட எண்ணெய் தயாரிப்பு பகுதியில் திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: