பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியை சேர்ந்தவர் காசி (50). இவர் உப்பளம் கிராமத்தில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவரது மகள் ஆனந்தி (16). இவர் வேண்பாக்கத் தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தனது மோட்டர் பைக்கில் காசி அழைத்துச் சென்றார். இவர்கள் பொன்னேரி அரசு கல்லூரி அருகே சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த காசியின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந் தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன் னேரி காவல் துறையினர் தந்தை, மகள் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:
அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே செவ்வாயன்று பகல் நடந்த சாலை விபத்தில் லாரி மோதி இருசக்கரவாகனத்தில் சென்ற தாயும் மகனும் உயிரிழந்தனர். தனது மகளுக்கு திருமணம் ஆக 20 நாட்கள் இருந்த நிலையில் அழைப்பிதழ் வைக்க மகனுடன் சென்ற தாய் விபத்தில் உயிரிழந்த சோகம் தெரியவந்துள்ளது. அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே அண்ணா சாலையிலிருந்து பக்கவாட்டு வழியாக ஜிபி சாலைக்கு செல்ல வலதுபுறமாக 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட டாரஸ் வகை லாரி வேகமாகச் சென்றது. அப்போது பக்கவாட்டிலிருந்து கிளப் அவுஸ் சாலையிலிருந்து எத்திராஜ் கல்லூரி நோக்கி வேகமாக தனது தாயாரை பின்புறம் அமர்த்தியபடி இளைஞர் மகேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். சில நொடிகளில் இருவரில் யார் பக்கம் தவறு என்பதைத் தீர்மானிக்கும் முன்னர் அந்தக் கோர விபத்து நிகழ்ந்தது. அருகில் உள்ள வாகன ஓட்டிகள், சாலையில் செல்வோர் அய்யோ என்று அலற ஓட்டுநரின் கட்டுப்பாட்டையும் மீறி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோத, வாகனத்துடன் லாரியின் அடியில் சிக்கிய நிர்மலாவும், அவரது மகன் மகேஷூம் லாரியின் சக்கரத்தில் சிக்கி நொடியில் உயிரிழந்தனர்.

அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கோர விபத்து நிர்மலா குடும்பத்தில் அடுத்த மாதம் நடக்கவிருந்த சந்தோஷமான நிகழ்வையே சோகமாக்கி விட்டது. சேத்துப்பட்டு லோகாம்பாள் தெருவில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி (56). இவரது மனைவி நிர்மலா (52). இவர்களுக்கு நாகராஜ், மகேஷ் என்ற 2 மகன்களும், ஹேமமாலினி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் பி.ஈ பட்டதாரி, இளைய மகன் மகேஷ் ஐடிஐ முடித்திருந்தார். மகள் ஹேமமாலினி எம்.ஏ.படித்துள்ளார். ஹேமமாலினிக்கு வரன் பார்த்து வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்சேகரன் என்பவரது மகன் ஹேமசுராஜ் (எ) சுராஜ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆவடியில் உள்ள திருமண மண்டபத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்காக தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் உறவினர்களுக்கு திருமணப்பத்திரிகை கொடுத்து வந்தனர். இந்நிலையில் சிலருக்கு அழைப்பிதழ் வைக்க வேண்டி இருந்ததால் நிர்மலா தனது இளையமகன் மகேஷை அழைத்துக்கொண்டு அண்ணாசாலைக்கு வந்தார். பின்னர் வீடு திரும்பும் போதுதான் ஸ்பென்சர் அருகே கோர விபத்தில் சிக்கினார்.

மகளுக்குத் திருமணம் நடக்க 25 நாட்களே இருக்கும் நிலையில் மனைவி மற்றும் இளைய மகனை விபத்தில் பறிகொடுத்த தட்சிணா மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் தேற்றமுடியாத சோகத்தில் ஆழ்ந் துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.