மதுரை:
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், புத்தகம்,சீருடை உள்ளிட்ட இதர செலவினங்களை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் இதனால் ஏழை குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் ராஜு என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், குறிப்பாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கல்வி உரிமைச் சட்ட விதிகளின் படி 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வியென்பது அடிப்படை உரிமை ஆகும். இந்த உரிமை அவர்களுக்குக் கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.