பெர்லின்:
மெஸுட் ஒஸில்….துருக்கி வம்சாவளியினரான இவர்,ஜெர்மனி கால்பந்து அணியின் நடுகளத்தில் சுழலும் முக்கிய நட்சத்திர வீரர் ஆவார்.ரஷ்ய உலகக்கோப்பை துவங்கும் நேரத்தில் (மே மாதம்) துருக்கி அதிபர் எர்டோகனை மெஸுட் ஒஸில் மற்றும் சக வீரரான கண்டோகன் சந்தித்தனர்.சந்திப்பின் போது அர்செனல் அணி ஜெர்சியை எர்டோகனுக்கு பரிசாக அளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எர்டோகனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வழியாக மெஸுட் ஒஸில் பதிவிட கண்டோகன் உட்பட பல்வேறு தரப்பினர் அவரைக் கண்டித்தனர்.அந்தப் பிரச்சனை அன்றோடு முடிவடைந்த போதிலும்,மே 14-ஆம் தேதி எர்டோகன் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தப் புகைப்படத்தை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்த பிரச்சனை மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் (மே 15) இந்தச் சர்ச்சைகளை மீறி ஜெர்மனி பயிற்சியாளர் உலகக் கோப்பைக்கான அணியில் மெஸுட் ஒஸில் மற்றும் கண்டோகன் பெயரை அறிவித்தார்.லீக் போட்டியில் ஜெர்மனி தோல்வியை சந்திக்க,தோல்விக்கான காரணங்களை கண்டுபிடிக்காமல் முன்னாள் வீரர்கள், ஒஸிலுக்கு ஜெர்மனி அணியில் விளையாடுவது பிடிக்கவில்லை என அடுத்த அணுகுண்டை வீசி சர்ச்சையை கிளப்பி விட்டனர்.

தொடர் சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்த மெஸுட் ஒஸில் ஜெர்மனி அணியில் இனப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது எனக்கூறி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில்,ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு இனப்பாகுபாட்டிற்கு ஒரு போதும் துணை நிற்காது என மெஸுட் ஒஸில் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் மெஸுட் ஒஸில் தனது முடிவை மாற்றிக்கொண்டு, மீண்டும் அணிக்குத் திரும்பினால் எங்களுக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு அறிக்கைக்குப் பின்பு மெஸுட் ஒஸில் இதுவரை எவ்வித தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.