திருவாரூர்:
கிராமப்புற வறுமையையும், ஏழைகளின் பசியையும் ஓரளவேனும் போக்குவதற்காக இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை முடக்கிப் போடும் வகையில் சட்டமீறலில் ஈடுபட்டு மக்கள் விரோத நடவடிக்கைகளில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என ஏ.லாசர் குற்றம் சாட்டினார்.

100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் கொண்டுவந்த திருத்தங்களை திரும்ப பெறக் கோரியும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை – 24) தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.கலைமணி தலைமையேற்றார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது :-

தமிழகத்தில் உள்ள 95 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்கவும், 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கி சீர்குலைக்கவும், ஊழல் முறைகேடுகளில் ஈடுபடவும் எண்ணுகிற எடப்பாடி அரசின் செயல்பாட்டை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள சட்டக் கூலியான 244 ரூபாயை முழுமையாக வழங்கிடவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி தினசரி கூலியாக 400 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இப்போராட்டம் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சட்டமன்றத்தில் யாரும் கருத்து சொல்லிவிடக்கூடாது என்பதற்காக நயவஞ்சகமாக 110 விதியின் கீழ் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கும் கோடிக்கணக்கான ரூபாயை மடைமாற்றம் செய்து வேறு வகையிலான பணிகளுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக்கொள்ள வகை செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் சட்டத்தை மீறும் செயலாகும்.

மோசமான நிர்வாகம்
தமிழக அரசு மோசமான ஆட்சி, நிர்வாகத்தினை நடத்தி வருகிறது. இந்த ஜூன், ஜூலை மாதங்களில் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் வயல்வெளிகளில் சுறுசுறுப்பாக சாகுபடி பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டிய மாதங்களாகும். ஆனால் நிலைமை என்ன? கனமழையின் காரணமாக கர்நாடக அரசு தன்வசம் தண்ணீரை வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலை வந்த போது பாதுகாப்பு கருதி உபரி நீரை திறந்துவிட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது. அதற்கு மேலும் வெள்ளமென தண்ணீர் பாய்ந்து வருவதால் தற்போது 80 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேட்டூர் அணை ஓரளவு நீர் இருப்புடன் இருந்த போது பாசனத்திற்காக திறந்திவிட கோரிக்கை விடுத்தோம். இன்றைக்கு 80 ஆயிரம் க.அடி தண்ணீரை திறந்து விட்டு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து அவசர அவசரமாக தூர்வாரும் பணியை செய்வதாகக்கூறி கொள்ளையடிக்கும் அரசு விவசாயிகள் கேட்டபோது வினாடிக்கு 20 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டிருந்தால் சாகுபடி பணிகள் சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் உயிர் பிரச்சனையாக இருக்கக்கூடிய நதிநீர் மேலாண்மையில் இந்த அரசு இவ்வாறாக செயல்படுவது மோசமான நிர்வாகத்திற்கு சிறந்த உதாரணமாகும். எனவே விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு உருப்படியான செயல்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

அரசின் அணுகுமுறையில் மாற்றம் உருவாகவில்லையென்றால் நாம் தொடர் போராட்டங்களை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.இப்போரட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தம்புசாமி, செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.மாரியமாள், மாவட்ட பொருளாளர் என்.பாலையா, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மணியன், வீ.ஜெயபால், எம்.மணி, கே.எம்.லிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிறைவாக 100 நாள் வேலை கேட்டு பயனாளிகள் 100-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.