திருப்பூர்,
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணை ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் துணை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடந்தது. இதில், பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்து தெரிவித்தனர்.

கார்த்திகேயன்: கோடங்கிபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட க.ச.எண் 344/2 ஆனது நீர்நிலைப் புறம்போக்கு ஆகும். அங்கு, தற்போது குழிதோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குழியானது செம்மிபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் தொட்டி கட்டும் பணி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நடைபெற வருகிறது. நீர் நிலைய புறம் போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யாதவாறு பாதுகாக்கவும் கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.  ஆனால், செம்மிபாளையம் பகுதிக்கான குடிநீர் தொட்டியை கோடங்கிபாளையம் நீர் நிலை ஆக்கிரமித்து கட்டுவதினால் பல இடையூறுகள் ஏற்படும். எனவே, கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்துமாறு கோடங்கிபாளையம் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் பொன்னுசாமி: திருப்பூர் வட்டம் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம் குளம் சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது நொய்யலில் இருந்து வரும் தண்ணீரில் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. பல மாதங்களாக தண்ணீர் நிறைந்துள்ள குளத்தில் தண்ணீரின் அலைகளால் குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஏரியில் கற்கள் சரிந்து, மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனே சரி செய்ய வேண்டும். அப்பகுதியில் மேலும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு செய்ய வேண்டும்.

தற்போது குளத்தில் தண்ணீர் நிறைந்து ஏரியின் கிழக்குப் பகுதியில் வெளியேறிக்கொண்டிருக்கிறது. அதில், ஒரு சிறிய மண்பாலம் உள்ளது. அதற்கு, வடக்கு பகுதியில் நிறைய விவசாயிகளின் தோட்டங்களும், குடியிருப்பு பகுதியும் உள்ளது. அங்கு செல்வதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் இந்த பாலத்தில் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த வழியில் டிராக்டர்கள் மற்றும் வாகனங்கள் மழைக்காலங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே இந்த மண் பாலத்தை கான்கிரீட் பாலமாக மாற்ற வேண்டும். மேலும், குளத்தை சுற்றியுள்ள வண்டிப்பாதைகளில் ஏராளமான முட்புதர்களும், செடிகளும் உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் இந்த வழியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஒவ்வொரு தாலுகா அலுவலங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள சிறு, குறு விவசாயிகள், விவசாயக்கூலி போன்றவர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் போன்ற பல உதவிகளை அரசு செய்து வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலிகள் பதிவு செய்தனர். அவர்கள் மட்டும் பயன் அடைகிறார்கள். தற்போது, மீண்டும் உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு உறுப்பினர் சேர்க்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக சேராதவர்கள் இதன் மூலம் பலன் அடைவார்கள். ஆகவே இதுகுறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பாசன வாய்க்கால்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பூமிகளுக்கு சேதாரம் இல்லாமல் தண்ணீர் செல்ல வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தொட்டிகள், சிமெண்ட் குழாய்கள் மூலம் தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த தொட்டிகள் குழாய்கள் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால், விவசாயிகள் கடைமடை பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கும் குடிமராமத்து பணிகள் மூலம் நிதி ஒதுக்கீட்டு செய்து விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதைதொடர்ந்து துணை ஆட்சியர் ஷர்வண் குமார் பேசுகையில், இனிவரும் காலங்களில் விவசாயிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக திகழ வேண்டும். மேலும் அதிகாரிகள் கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தால், அவரவர் துறைகளின் நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.