===எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்===
தினமும் 1 ஜிபி, 1.5 ஜிபி, 2 ஜிபி என்று பல கட்டணத் திட்டங்களை அலைபேசி நிறுவனங்கள் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வரம்பற்ற டேட்டா பயன்பாடு என்று சொல்லப்பட்டாலும் திட்டத்திற்கேற்ப குறிப்பிட்ட வரம்பைத் தாண்டியதும் நத்தை வேகத்திற்கு மாறிவிடுகிறது.பெரு நகரங்களைத் தவிர்த்து பல கிராமப் புறப் பகுதிகளில் டேட்டா இருப்பு இருந்தாலும் வேகம் என்னவோ ஆமைக்கும் நத்தைக்குமான போட்டிதான். இது ஒருபுறம் இருக்க, எல்லாம் சரியாக இருக்கும் சிலருக்கு பகலிலேயே மொத்த டேட்டாவும் காணாமல் போகிறது. என்ன நடந்தது, என்ன செய்தோம் என்று யோசித்து முடிப்பதற்குள் அந்த நாள் கடந்து விடுகிறது. இது போன்றி பிரச்சனை இருப்பவர்கள் டேட்டாவை சேமிக்க உங்கள் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் செயல்பாடு மற்றும் போன் அமைப்புகளில் மாற்றம் செய்து வீணாகும் டேட்டாவை சேமிக்கலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

பின்புல டேட்டா இழப்பைத் தடுக்க
ஆண்ட்ராய்ட் போன்களில் பின்புல டேட்டா பரிமாற்றத்தைத் தடுப்பதன் மூலம் அதிக அளவு டேட்டா பரிமாற்றத்தை தடுக்கலாம்.இது உங்களுக்கு அதிக அளவு டேட்டா சேமிப்பை வழங்கக் கூடும். இதனை செயல்படுத்த உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோனில் Settings> Data Usage > Restrict Background Data என்பதை தேர்வு செய்யவும். 

ஜிமெயில்
ஜிமெயில் கணக்குடன் ஒத்திசையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள Sync செயல்பாட்டை தடுப்பதன் மூலம் தானியங்கியாக செயல்படும் பின்புல டேட்டா (Background data) பரிமாற்றத்தை தடுக்கலாம். இதனை செயல்படுத்துவதற்கு ஃபோனில் Settings செல்லவும். அதில் Accounts என்பதைத் தேர்வு செய்து Google என்பதில் நுழையவும்.காட்டப்படும் உங்கள் மின்னஞ்சல் கணக்கைத் தேர்வு செய்தால் ஆன்லைனில் எந்தெந்த சேவைகளை ஒத்திசைவாக இருக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை தேர்வு செய்யவும். இதன் மூலம் ஓரளவு டேட்டாவை சேமிக்கலாம்.

செயலிகள் புதுப்பிப்பு
நாம் பதிந்திருக்கும் செயலிகளுக்கு அப்டேட்கள் வந்தவுடன் தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதியை நிறுத்திவைக்கவும். இதனை செயல்படுத்த ஃபோனில் கூகுள் பிளே ஸ்டோர் செயலியைத் திறந்து அதில் செட்டிங்ஸ் தேர்வு செய்யவும்.அதில் ஆட்டோ அப்டேட் ஆப்ஸ் என்பதில் Do not auto-update apps என்பதைத் தேர்வு செய்யவும். Wifi டேட்டா எளிதாகக் கிடைக்கும் என்பவர்கள் Auto-update apps over Wi-Fi only என்பதைத் தேர்வு செய்யலாம்.

ஃபேஸ்புக் செயலி
டேட்டா இழப்பில் பெரும்பங்கு வகிப்பவை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள செயலிகள்தான். தானியக்கமாக இயங்கும் வீடியோக்கள், டவுன்லோட் ஆகும் படங்கள் போன்ற செயல்பாடுகள் டேட்டாவை மட்டுமல்ல உங்கள் ஃபோன் பேட்டரி சக்தியையும் விரயமாக்கக் கூடியது. ஃபேஸ்புக் லைட், மெஸஞ்சர் ஆப்கள் குறைவான டேட்டாவை பயன்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப் செயலி
வாட்ஸ்அப் செயலியில் தானாகவே வீடியோ மற்றும் படங்கள் பதிவிறக்கமாவதைத் தடுப்பது முக்கியமான செயல்பாடாகும். இதனை செயல்படுத்த வாட்ஸ்அப் செயலியைத் திறந்து செட்டிங்ஸ் நுழையவும். Data and Storage Usage என்பதைத் திறக்கவும். Media Auto-download என்பதில் மொபைல் டேட்டா என்பதைத் தேர்வு செய்து Photos, Audio, Videos, documents என்பதற்கு நேராக உள்ள டிக் மார்க்குகளை எடுத்துவிடவும்.wifi பயன்பாடு இலவசமாக இல்லாதவர்கள் அடுத்ததாக உள்ள When connected on Wifi என்பதிலும் இதே போன்று டிக் மார்க்குகளை எடுத்து விடவும், அடுத்து ரோமிங் பகுதியிலும் அனைத்து டிக் மார்க்குளையும் எடுத்து விடவும். இதனால் எந்த நிலையிலும் டேட்டாவை இழக்காமல் தடுக்கலாம்.

க்ரோம் செயலி
குரோம் பிரௌசரின் செட்டிங்ஸ் மெனுவில் டேட்டா சேவர் ஆப்ஷன் ( Data saver option ) என்பதை தேர்வு செய்து வைத்தால் வெப் பக்கங்கள் திறக்கும்போது அவற்றில் உள்ள படங்கள் வீடியோக்களின் டேட்டா அளவு குறைக்கப்பட்டு கிடைக்கும். இதனால் பிரவுசிங் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் டேட்டா இழப்பு குறையும். குரோம் பிரௌசருக்கு பதிலாக ஃபயர்பாக்ஸ் அல்லது ஓபெரா பிரௌசர்கள் பயன்படுத்தலாம். இவற்றில் மேம்பட்ட டேட்டா சேமிப்பு வசதிகள் உள்ளன.

கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் செயலி மூலமாக ஏற்படும் டேட்டா இழப்பை சரி செய்ய. நாம் இருக்கும் இருப்பிடத்தைப் பதிவு செய்யும் லெக்கேஷன் வசதியை அணைத்து வைக்கவும். அடுத்ததாக தேவைப்படும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் ஆஃப்லைனில் பயன்படுத்தும்படி செயல்பாட்டை அமைத்துக் கொள்ளுங்கள்.யூ டியூப் செயலி
வீடியோ பிரியர்கள் அதிகம் பார்க்கும் யூடியூப் செயலியில் டேட்டாவை குறைவாக செலவழிக்க வீடியோவின் தரத்தைக் குறைத்துப் பார்க்கலாம். வீடியோ பிளே மெனுவில் செட்டிங்ஸ் சென்று அதில் வீடியோ குவாலிட்டி அளவை 144P, 240P ஆகிய குறைந்த அளவுகளில் ஒன்றிற்கு மாற்றிக் கொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.