கடலூர்,
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரத்தில் தில்லையம்மன் கோயில்பகுதி, வாகீசர் நகர், கோவிந்தசாமி தெரு, அண்ணா தெரு ஆகிய இடங்களில் ஜூலை 14 ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சிதம்பரம் நகராட்சி துறையினர் ஆண்டாண்டு காலம் உழைத்து, கட்டிய 369 க்கும் மேற்பட்டவீடுகளை ஆக்கிரமிப்பு என்ற ஒற்றை காரணம் கூறி இடித்துதரைமட்டமாக்கியுள்ளனர்.

வீடுகளை இடிப்பதற்கு முன்பு அதிகாரிகள் இரண்டு முறை பொதுமக்களிடம் தகவல் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனை சென்று சந்தித்து முறையிட்டுள்ளனர். அப்போது அவர் ‘ நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்கள் வீடுகளை இடிக்கமாட்டார்கள், நான் பார்த்துக் கொள்கிறேன், அதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறேன்’ என பொதுமக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். இதனை நம்பிமக்களும் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

வீடுகள், உடைமைகளை இழந்தபெண்கள் பெரியவர்கள், குழந்தைகள், மாணவர்கள் சிதம்பரத்தில் அனாதைகளைப் போல நடைபிணமாக மாற்றி உள்ளனர்.  வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தங்கும் வசதி, சாப்பாடு, குடிநீர் , கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பள்ளிச் சீருடை, புத்தகம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும், ஆதார் உள்ளிட்ட சான்றுகளை இழந்துள்ள மக்களுக்கு அவற்றை உடனே வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகளை இழந்துள்ள 369 குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். வீடுகளை, உடைமைகளை, பொருட்களை இழந்துள்ள மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன், நகர செயலாளர் ராஜா, விவசாய சங்கத் தலைவர் பி.கற்பனைச்செல்வம், அதிமுக நிர்வாகி முத்து, திமுக நிர்வாகிகள் வெங்கடேசன், பாலு, தேமுதிக நிர்வாகிகள் பாலு, விஜயகுமார், ரமேஷ், காங்கிரஸ் நிர்வாகி லோகநாதன், மதிமுக நிர்வாகி குமரன், பாமக நிர்வாகி அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பேச்சுவார்த்தையில், மாற்று இடம் வழங்குவதற்கான இடத்தினை பொதுமக்கள் தேர்வு செய்து கூறினால் அதனை ஆராய்ந்து வீட்டு மனையாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று ஆட்சியர் கூறினார். மேலும், பல்வேறு கோரிக்கைகளை கட்சியினர் வலியுறுத்தியபோதிலும் உத்தரவாதமான பதில் அளிக்கப்படாததால் கட்சியினர் அங்கிருந்து வெளியேறினர்.

“ஆட்சியரின் பதில் போதுமான திருப்தியளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான வகையில் பதிலளிக்காமல் பிரச்சனையை இழுத்தடித்து வருகிறார். மாற்று இடம் வழங்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்” என அனைத்துக் கட்சியினரும் தெரிவித்தள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.