புதுதில்லி;
மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், தங்களின் குரலை ஓங்கி ஒலித்த நிலையில், அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கம் மேலாக தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது எம்.பில். மற்றும் பிஎச்.டி., மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சியை முடித்து, கட்டுரையை சமர்ப்பிக்க இருக்கும் நிலையில், அவர்களை கட்டுரை சமர்ப்பிக்க விடாமல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தூக்குத் தண்டனை முறைக்கு எதிராக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த 2016-ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இதில், அப்போதைய மாணவர் பேரவைத் தலைவர்களான கன்னையாகுமார், உமர் காலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவான நிகழ்ச்சியை நடத்தியதாக கூறி கன்னையாகுமார், உமர் காலித் உள்ளிட்ட மாணவர்களை மத்திய பாஜக அரசு கைது செய்தது. தேசத்துரோக வழக்கும் புனைந்தது.
மாணவர்கள் மீதான இந்த அடக்குமுறையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பேசியதற்காக அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாகவே மாணவர்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது. மத்திய பாஜக அரசானது, ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அவர்ள் மீது தேவையில்லாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என நீதிமன்றம் கூறியும்கூட அதைப்பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கன்னையா குமார், உமர் காலித், பக்கோடா தயாரிப்பு போராட்டம் நடத்திய மணீஷ் குமார் உள்ளிட்ட பலருக்கு ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளது.அத்துடன் நிற்காமல், இம்மாணவர்களின் எம்.பில் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்கக் கூடாது என்றும் தற்போது பிடிவாதம் காட்டி வருகிறது.
உமர் காலித், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் பழங்குடிகள் பற்றி தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார். அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கான அனுமதிகள் அனைத்தையும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து பெற்றாலும், பல்கலைக்கழக தலைமை தேர்வுக் கண்காணிப்பாளர் மட்டும் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திடாமல் உள்ளார்.

ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் கன்னையாகுமார் புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி சித்தார்த் மிருதுள், ஜூலை 20-ஆம் தேதி கன்னையா குமார் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், ஆகஸ்ட் 16 வரை உமர் காலித் மீது எந்தவொரு நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.ஆனால், தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்தினால்தான் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க விடுவோம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்கி வருகிறது.கன்னையா குமார், உமர்காலித், மணீஷ் குமார் மட்டுமன்றி அஸ்வதி நாயர் என்பவரின் ‘ஜிம்பாவே நாட்டு அரசியல் பொருளாதார வளர்ச்சி 1980 – 2013’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையையும் பல்கலைக்கழக நிர்வாகம் சமர்ப்பிக்கவிடவில்லை. அஸ்வதிக்கும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: