தஞ்சாவூர்:
வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அராஜக நடவடிக்கையால் கும்பகோணத்தில் கோவில் இடத்தில் குடியிருந்தவர் மரணமடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரம் ஆதிகும்பேசுவரர் கோவிலுக்கு சொந்தமான கோவில் தெற்கு வீதியில் உள்ள இடத்தில் இராமதாஸ் மகன் தனசேகரன் (64) என்பவர் சுமார் 70 ஆண்டுகளாக தனது தந்தை காலத்திலிருந்து வீடு கட்டி குடியிருந்து வந்தார். இந்த வீட்டுக்கு ஆண்டுதோறும் குத்தகையை ஆதிகும்பேசுவரர் கோவிலுக்கு செலுத்தி வந்தார்.

இந்நிலையில் வாடகை மற்றும் குத்தகை தொகையை இந்து சமய அறநிலையத்துறை பலமடங்கு உயர்த்தி, ஒரே தவணையில் செலுத்த நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இதனால் கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
தனசேகரனிடமும் பாக்கித்தொகை ரூ.73 ஆயிரத்தை ஒரே தவணையில் உடனடியாக கட்ட வேண்டும் என அதிகாரிகள் நிர்ப்பந்தித்துள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று இந்துசமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் ஆர்.இளையராஜா, கோயில் செயல் அலுவலர் கோ.கவிதா ஆகியோர் உடனடியாக பணத்தை செலுத்துமாறு தனசேகரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

தனசேகரன் குடும்பத்தினர் 2 மணி நேரம் அவகாசம் கேட்டு, பணத்தை திரட்டிக்கொண்டு கட்ட வந்துள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் மயிலாடுதுறை இணை ஆணையர் அலுவலகம் சென்று கட்டுமாறு கூறி விட்டு, இந்துசமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் ஆர்.இளையராஜா, கோயில் செயல் அலுவலர் கோ.கவிதா, கும்பகோணம் மேற்கு காவல்துறையினர், வருவாய்துறையினர், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் தனசேகரன் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை எடுத்து சாலையில் வீசி எறிந்துள்ளனர். மேலும் தனசேகரன் குடும்பத்தினரையும் வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றுள்ளனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் தனசேகரன் குடும்பத்தினர் அவமானமடைந்துள்ளனர். உடல் நலமின்றி இருந்த தனசேகரனை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி வெளியேற்ற முயன்றுள்ளனர். இந்த அதிர்ச்சியில் தனசேகரனை அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து தனசேகரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது, அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து அவர்களை முற்றுகையிட்டனர்.

பின்னர் கும்பகோணம் வட்டாட்சியர் ந. வெங்கடாஜலம், போலீஸ் டிஎஸ்பி எஸ். கணேசமூர்த்தி, காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் வீட்டை காலி செய்யும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. உயிரிழந்த தனசேகரனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மரணமடைந்த தனசேகரனுக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், சுந்தரமூர்த்தி என்ற மகனும், கஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

சிபிஎம் அஞ்சலி-ஆறுதல்
தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை-பாண்டியன், குடியிருப்போர் நலச்சங்கத்தின் ஆ.செல்வம், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் எஸ்.பி.மணி, வாலிபர் சங்க ஒன்றியச்செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் தனசேகரன் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம், தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர்-சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் இத்தகைய செயல் வன்மையாக கண்டித்துள்ளனர்.

மேலும் இந்துசமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் ஆர்.இளையராஜா, கோயில் செயல் அலுவலர் கோ.கவிதா, கும்பகோணம் மேற்கு காவல்நிலைய அதிகாரிகள், வருவாய்துறையினர், கோயில் பணியாளர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற அராஜகமான செயல்களில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவம் இனிமேலும் தொடருமானால் பொதுமக்கள், குடியிருப்போர், குத்தகை செலுத்துவோரை திரட்டி வலுவான போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.