திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமலைக்கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளி சமையலராக, தலித் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் வேலை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சனையில் ஈடுபட்ட சாதி ஆதிக்கவெறியர்கள் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவிநாசி வட்டம் சேவூரை அடுத்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் சமையல் பணியாளராக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவ்வூரைச் சேர்ந்த சாதிய ஆதிக்க சக்தியினர், தலித் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் தங்கள் குழந்தைக்கு உணவு சமைத்து தருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி அவரை சமைக்க விடாமல்தடுத்து நிறுத்தியதுடன், அவரை அப்பள்ளியில் இருந்து மாறுதல் செய்ய நிர்பந்தம் செலுத்தியதுடன், பள்ளியை திறக்க விடாமல் தகராறு செய்தனர். குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் சாதி ஆதிக்கவெறியர்களின் செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாப்பாளை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய சாதி ஆதிக்க சக்தியினர் 87 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சேவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருந்தனர்.

இதையடுத்து திங்களன்று சேவூர் கைகாட்டி பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகளின் சார்பில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்று குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர். இந்நிலையில் மேற்படி வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட 87 பேரில் திருமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த க.கந்தசாமி (வயது 47), க.பழனிசாமி (39), மு.மூர்த்தி (27), மா.மூர்த்தி (47) ஆகிய நான்கு பேரை திங்களன்று இரவு காவல் துறையினர் கைது செய்தனர். அத்துடன் செவ்வாயன்று அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி (60), ஏழூர் சக்திவேல் (40) மற்றும் சண்முகம் (42) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 80 பேரை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.