புதுதில்லி, ஜூலை 23-

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ரக்பார் கான் என்னும் பால்பண்ணை வியாபாரி குண்டர் கும்பலால் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜகவின் ஆட்சியில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்னும் பகுதியில் குண்டர் கும்பலால் முஸ்லீம்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெஹல்கான், உமர்கானை அடுத்து இப்போது ரக்பார் கான் கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு விலங்கின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படும் கொடுமை இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம்.

பாஜக ஆட்சியின் கீழ் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் பல்வேறுவிதமான  அமைப்புகளும் முஸ்லீம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருவதன் விளைவே இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொலைகளாகும். கொலை செய்யும் குண்டர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக பாஜக அமைச்சரால் அவர்கள் மாலை அணிவித்து பாராட்டப்படுகிறார்கள். இத்தகைய இழி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. பசுவின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளபின்னரும் இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜக அரசாங்கங்களும், அதன் கீழ் இயங்கும் குழுக்களும் மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றங்கள் புரிவதை மாற்றிக்கொள்ளவில்லை.

ரக்பார் கான் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் கிரிமினல்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் விசாரணை தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது. மேலும், ரக்பார் கானின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இத்தகைய இழி சம்பவங்கள் இனியும் தொடராது இருக்கும்விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  ராஜஸ்தான் மாநில அரசை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.

இவ்வாறு ஹன்னன்முல்லா அறிக்கையில் கோரியுள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.