புதுதில்லி, ஜூலை 23-

ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தில் உள்ள கொல்கான் கிராமத்திலிருந்து சென்ற முஸ்லீம் பால் பண்ணை உரிமயாளர் ரக்பார் கானை, வெள்ளியன்று இரவு, ராஜஸ்தான் ஆல்வார் மாவட்டத்தில்  கொலை செய்தது ஏழுபேர் அடங்கிய கும்பல் என்று ரக்பார் கானுடன் சென்று, கொலைபாதகர்களிடமிருந்து தப்பித்த அஸ்லாம்  கூறியுள்ளார்.  இது தொடர்பாக அஸ்லாம், ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினரிடம் கூறியபோது, அவர்களில் ஐந்து பேர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் மூவரைக் கைது செய்திருப்பதாக, காவல் துறையிர் கூறியிருக்கின்றனர்.

அஸ்லாமின் வாக்குமூலம்

நடந்த சம்பவம் குறித்து அஸ்லாம், காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

“நானும், ரக்பாரும் கான்பூரிலிருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ராம்கார் அருகிலுள்ள லாலாவண்டி கிராமத்தில் ஏழு பேர் அடங்கிய கும்பல் ஒன்று எங்களைத் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முயன்றபோது, வெடிகுண்டுகளுடனும், கம்புகளுடனும் இருந்த அவர்கள், எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலேயே எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் ஓட்டிவந்த கால்நடைகள் சாலையோரம் இருந்த வயல்களில் ஓடிச்சென்று நின்றன. இவ்வாறு அவர்கள் எங்களைத் தாக்கும்போது, அவர்களில் ஒருவன், “விஜய், அவன் கால்களை உடை,” என்றும், “தர்மேந்தர், அவன் தலையில் அடி” என்றும். “நரேஷ், அவன் கைகளை உடை” என்றும் ஒருவர்க்கொருவர் கத்திக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மொத்தம் ஏழு பேர். அவர்களில் ஐந்து பேரின் பெயர்கள் ஞாபகத்தில் இருக்கிறது.”

இவ்வாறு அஸ்லாம் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். தினக்கூலித் தொழிலாளியான  அஸ்லாம், மாட்டை வாங்கிக்கொண்டு ஓட்டிவருவதற்கு உதவிடுமாறு ரக்பார் கான்  கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவருடன் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்திருக்கிறார். பசுப்பாதுகாப்புக்குழுவைச் சேர்ந்த குண்டர்கள் கொலை செயல்களில் ஈடுபட்டுவருவதால், இரவிலேயே பயணம் செய்வோம் என்று ரக்பர் கான் கூறி, அவ்வண்ணமே இரவில்தான் திரும்பி வந்திருக்கிறார்கள். இரண்டு பசுக்களுடனும் அவற்றின் கன்றுக்குட்டிகளுடனும், ராம்காரின் லாலாவண்டி கிராமத்தின் உள்ள காட்டுப்பகுதி வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலையில் மோட்டார் சைக்கிள் சத்தத்தைக் கேட்டு, மாடுகள் மிரண்டிருக்கின்றன. பின்னர் பயந்துசாலையின் ஓரமாக வயல்களுக்குள் ஓடி நின்றிருக்கின்றன.

மாடுகளின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்த ரக்பார் கான் அவற்றை மீண்டும் சாலைக்கு இழுத்துவர முயற்சித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்கள், எங்களைச் சூழ்ந்துகொண்டு, வானத்தில் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இரண்டு பேர் என்னை நோக்கி ஓடிவந்தனர். மற்றவர்கள் ரக்பார் கானைப் பிடித்துக்கொண்டனர். அஸ்லாம் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு, வயல்களுக்குள் ஓடிச்சென்று ஒளிந்துகொண்டுவிட்டார். ஆனால் ரக்பார் கான் பயங்கரமாகக் கத்தினார். எனினும் அவரால் அவர்களிடமிருந்து தப்பிவர முடியவில்லை.

பின்னர் அஸ்லாம் அங்கிருந்து எப்படியோ தப்பித்து, வழி தெரியாமல் சுற்றி சுற்றித் திரிந்துவிட்டு சனிக்கிழமை காலையில் 10 மணிக்கு ஊருக்கு வந்திருக்கிறார். அதற்குள் காவல்துறையினர், ரக்பார் கான் கொல்லப்பட்ட சம்பவத்தை ரக்பார் கானின் குடும்பத்திற்குத் தெரிவித்திருந்தனர்.

கிராமத்தினரும், உள்ளூர் மக்களும் ரக்பாரின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தவர்கள், அங்கு வந்த காவல்துறையினரிடம், ராஜஸ்தானிலிருந்து கால்நடைகளை வாங்கிக்கொண்டு திரும்புகிற முஸ்லீம்கள் இவ்வாறு அடிக்கடி தாக்கப்படுகிறார்கள், அவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கிறாத்ரகள், அவர்களைக் கொலையும் செய்துவிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

”நான் பால்பண்ணைத் தொழிலில் கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இதற்கு முன்பெல்லாம் இப்படி நடந்தது கிடையாது. இரண்டு, மூன்று ஆண்டுகளாகத்தான் இத்தகைய கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது இது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. உண்மையில், ஆல்வாரில் இது மிகவும் மோசமான ஒன்று. சோதனைச் சாவடிகளில் நின்றுகொண்டிருக்கின்ற போலீசார், எங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டபின்னர் எங்களை அனுப்பிவிடுவார்கள்.  பசுப்பாதுகாப்புக் குழுவினர் என்று சொல்லிக்கொள்ளும் குண்டர்கள்தான் எங்களை வழிமறித்து, பணமும் பெற்றுக் கொண்டு, சில சமயங்களில் எங்கள் கால்நடைகளையும் ஓட்டிச்சென்றுவிடுவார்கள்,” என்று ரக்பாரின் மாமா முகமது லியாஸ் கூறியிருக்கிறார்.

ரக்பாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குருகிராம் – ஆல்வார் நெடுஞ்சாலையில் பல மணி நேரம் அமர்ந்து, குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும், சனிக்கிழமையன்றிரவு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அதன்பிறகு ராஜஸ்தான் மற்றும் ஹிரியானா மாநில அரசு அதிகாரிகள் செயலில் இறங்கி, மறியலில் ஈடுபட்டவர்களை வந்து சந்தித்துள்ளர். அவர்களிடம் ரக்பார் கானின் குடும்பத்தார், “ரக்பார் கானைக் கொலை செய்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்குக் கிஞ்சிற்றும் கருணை காட்டக்கூடாது. எங்கள் குடும்பத்தில் ரக்பார் கான் மட்டும்தான் சம்பாதித்து வந்து, குடும்பத்தில் இருந்த ஒன்பது பேரைக் காப்பாற்றி வந்தார். எனவே எங்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர்கள் குடும்பத்தின் சார்பாக அவருடைய மாமா முகமது உமர் கோரினார்.

கொலை செய்யப்பட்ட ரக்பார் கானின் வயது 31. எழுதப்படிக்கத் தெரியாத ரக்பார் கான், கால்நடைகளைப் பராமரிப்பதுடன், கல்குவாரியிலும் பகுதிநேர தொழிலாளியாக வேலைபார்த்து, ஒன்பது பேர்கள் அடங்கிய தன் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார். அவருடைய மனைவியும் எழுதப்படிக்கத் தெரியாதவர்தான். அவருக்கு ஏழு குழந்தைகள். மூத்த பெண்ணின் வயது வெறும் 12தான்.  கடைசி குழந்தையின் வயது வெறும் 1. ரக்பார் கான் இருந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டாதவிதத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். இப்போது என்னசெய்வதென்றே தெரியவில்லை,” என்று ரக்பார் கானின் மாமா முல்தான் கூறினார்.

அஸ்லாம் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், ”ரக்பார் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவென்றால் எவ்விதத் தப்புமே செய்யாத நிலையில் அவர் கொல்லப்பட்டிருப்பதுதான். எனக்கு  அவரை சிறுவயதிலிருந்தே தெரியும்,” என்றார்.

அவர்களின் நூ கிராமத்தில் உள்ள  600 குடும்பங்களில் பெரும்பாலானவை கால்நடை வளர்ப்பையும் கல் குவாரிகளில் வேலைசெய்வதையும்தான் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. கிராமத்தில் மூன்றில் ஒரு பங்கினர் இந்துக்கள். உண்மையில் இரு சமூகத்தினரும் மிகவும் நல்லிணக்கத்துடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இருதரப்பினரும் இரு தரப்பினரின் திருமணங்கள் மற்றும் இதர விழாக்களிலும் பரஸ்பரம் பங்கேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், நூ கிராமத்திலிருந்து வெளியே செல்லும்போது,  நாங்கள் இந்த நாட்டையே சேர்ந்தவர்கள் அல்ல என்பதுபோல் நாங்கள் நடத்தப்படுகிறோம்,’’ என்று பெரோஸ் என்பவர் மிகவும் மனம் நொந்துகொண்டார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.