திருச்சிராப்பள்ளி:
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சப்-ஜெயில் ரோட்டில் இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் திருச்சி – சென்னை பைபாஸ் ரோடு பழைய பால்பண்ணை உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

புதிய வெங்காய மண்டியில் உரிமையாளர்கள் பழைய தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காமல் புதிய தொழிலாளர்களை வைத்து சரக்குகளை ஏற்றி, இறக்கினர். இதனால் பழைய வெங்காய மண்டியில் வேலை பார்த்த 277 தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இதையடுத்து 277 தொழிலாளர்களும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம், மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை துணை ஆணையர் லிங்கம் தலைமையில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படாததால் பேச்சுவார்த்தை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 19 ஆம் தேதி முதல் அனைத்து தொழிலாளர் வீடுகள், வெங்காயமண்டி கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 277 தொழிலாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரண்டனர்.

அப்போது அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி ஆணையர் சிகாமணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பின்னர் ஆர்டிஓ(பொ) ரவிச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பழைய வெங்காயமண்டியில் வேலை பார்த்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வரும் புதன்கிழமை முதல் புதிய வெங்காய மண்டியில் வேலை வழங்குவது. இவர்களுடன் அங்கு தற்போது வேலை செய்து வரும் சுமைப்பணித் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வது என முடிவானது.

பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சுமைப்பணித் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாரதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரமேஷ், குமார், தொமுச மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், வேல்முருகன், தங்கவேல், ராமர், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் பிரபாகரன், வெற்றிச்செல்வன், வெங்காயமண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெள்ளையப்பன், செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.