புதுதில்லி:
நாட்டிலேயே சிறப்பான நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.பிஏசி எனப்படும் பொதுமக்கள் விவகாரங்கள் மையம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்குவதில், இந்திய அளவில் கேரளா முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கேரளா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு இந்திய பொருளாதார நிபுணர் சாமுவேல் பால் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு மையம், ஆண்டுதோறும் இந்திய மாநிலங்களின் நிர்வாகம் பற்றி ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு வருகிறது. சமூக மற்றும் பொருளாதார காரணிகள் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படும். இதில், பொதுமக்கள் சேவை மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

அதனடிப்படையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கேரளா, சிறப்பான நிர்வாகம் தரும் மாநிலமாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள், கேரளாவுக்கு அடுத்தப்படியாக இதர 5 இடங்களைப் பிடித்துள்ளன.

முதல் பத்து இடங்களில் 9 இடங்களை தென்னிந்திய மாநிலங்களே பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தில் மட்டும் வடமாநிலமான குஜராத் உள்ளது.வடமாநிலங்களில் மிக மோசமான ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த மாநிலங்களில் சீரான நிர்வாகம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை 2 கோடிக்கும் குறைவாக உள்ள மாநிலங்களை தனியாகப் பிரித்து மற்றொரு துணை ஆய்வறிக்கையை பிஏசி வெளியிட்டுள்ளது. அதில், இமாச்சல பிரதேசம் முதலிடத்தில் உள்ளது; கோவா, மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்றும் பிஏசி தெரிவித்துள்ளது. மேலும், இந்த பட்டியலில் கடைசி இடம்பிடித்துள்ள நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் நிர்வாகம் மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வளரும் நாடான இந்தியா, தனது நிர்வாகப் பணிகளுக்கு முறையான கவனம் செலுத்த வேண்டும். மேலும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்றும் பிஏசி மேற்கோள் காட்டியுள்ளது.

வஞ்சிக்கும் மத்திய அரசு
நாட்டிலேயே சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக கேரளம் உள்ள நிலையில், அந்த மாநிலத்தின் நிர்வாகத்தை குலைக்கும் அனைத்து வேலைகளையும் மோடி அரசு செய்து வருகிறது.

அண்மையில், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்பட கேரளத்தின் அனைத்துக் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்தனர். ரேசன் விநியோகத்திற்கான அரிசி, கோதுமை, பருப்புகளின் ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும்; கோட்டயம் அருகிலுள்ள எச்என்எல் தொழிற்சாலையை மத்திய அரசே நடத்த வேண்டும் அல்லது மாநில அரசிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்; கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்க அனுமதிக்க வேண்டும்; பாலக்காடு ரயில் பெட்டித் தொழிற்சாலை விஷயத்திலும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர். மழை, வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய 1000 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் ஒன்றாகும். ஆனால், எதற்கும் மோடி அசைந்து கொடுக்கவில்லை. இதற்கிடையே, மழை வெள்ளப் பாதிப்புக்கு கேட்கப்பட்ட தொகை ரூ. 1000 கோடி என்ற நிலையில், வெறும் 80 கோடி ரூபாயை போனால் போகிறது என்று மோடி அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. இது கேரள மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.