தாராபுரம்,
உடுமலை அருகே தம்பியை கொன்ற அண்ணன் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, சரவணம்பட்டி அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (55). இவரது சகோதரர் லட்சுமணசாமி (54). மாரிமுத்துவின் மகன் குமார் (31). இவர்கள் மூவரும் உடுமலையை அடுத்த தளி காவல்நிலையத்திற்குட்பட்ட ஜல்லிபட்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தோட்டத்தில் மரம் வெட்டும் வேலையை செய்து வந்தனர். இதில் குமாரின் மனைவியான பைந்தமிழ்ச்செல்வி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

இத்தகவலை பைந்தமிழ்செல்வியிடம், குமாரின் சித்தப்பாவான லட்சுமணசாமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் மற்றும் அவரது சந்தை மாரிமுத்து இருவரும் சேர்ந்து கடந்த 2.11.13 லட்சுமணசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி கருணாநிதி, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குமார், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.