சென்னை,
“ஒருத்தரும் வரல’’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய வழக்கறிஞர் திவ்யபாரதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அடைந்த துயரை விளக்கும் வகையில் “ ஒருத்தரும் வரல’’ என்ற ஆவணப்படத்தை திவ்யபாரதி இயக்கியுள்ளார். இதற்கான முன்னோட்ட படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல்நிலைய ஆய்வாளர் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவுசெய்தார். கோவை நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ‘வழக்கு ஒன்றில் விசாரிக்க வேண்டும் காவல்நிலையத்திற்கு உடனே வரவேண்டும்’’ என்றும் ஆய் வாளர் கூறினார்.இதற்கு சக வழக் கறிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் தம்மை கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதை அறிந்து திவ்யபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நிபந்தனைகளுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மனுமீதான விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் “ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் வேண்டுமென்றே மக்களிடம் அரசுமீது தவறான எண்ணம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆவணப்படத்தை திவ்யபாரதி தயாரித்துள்ளதாகவும் கூறி முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செந்தில் நாதன், “ஒருத்தரும் வரல’’ ஆவணப் படத்தில் ஒக்கிபுயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் துயரங்களை தான் திவ்ய பாரதி வெளிபடுத்தியுள்ளார். பொதுப்பிரச்சனையில் கருத்துகூற இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு.காவல்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளின் படி அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே அவரது செயல்பாடுகளை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது பதிவு செய்யப் பட்டுள்ள பொய்யான வழக்கை ரத்து
செய்யவேண்டும்’’ என்று வாதாடினார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் அரசு வழக்கறிஞர்,முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் “ஆவணப்படத்தில் மனுதாரர் கூறியுள்ள பல வசனங்கள் மாநில அரசின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது’’ என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, திவ்யபாரதிக்கு நிபந்தனைகளுடன்கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் கைது செய்யப் பட்டால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் வழக்கின் தீர்ப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் கூடலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுதாரர் ஆஜராகி ரூ.10 ஆயிரம் பத்திரம் மற்றும் காவல்துறை ஏற்றுக்கொள்ளக்கூடிய இருநபர் உத்தரவாத கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூடலூர் காவல் நிலையத்தில் ஒருவாரம் நாள்தோறும் காலை 10.30 மணிக்குள் நேரில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.