சென்னை,
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை மற்றும் சர்வேக்களில் பங்கேற்க மாட்டோம் என வருமான வரி ஊழியர்கள் கூட்டமைப்பும், அதிகாரிகள் சங்கமும் அறிவித்துள்ளன.

காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும், துறையில் பணிபுரியும் கார் ஓட்டுநர்களின் பதவிகளில் ஏற்படும் பாதிப்புகளை களைவதற்கு மற்ற ஊழியர்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரி ஊழியர் சம்மேளனம், வருமான வரி அதிகாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் திங்களன்று (ஜூலை 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகம் முன்பு சம்மேளனத் தலைவர் பி.மீராபாய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வருமான வரி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.இளங்கோ, துணைத் தலைவர் கீதாதேவி, சம்மேளன பொதுச் செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன், நிர்வாகி சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதுகுறித்து பொதுச் செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான வரித் துறை அதிகாரி பதவியில் இருந்து 2017 – 18, 2018 – 19 ஆண்டுக்கான உதவி ஆணையர் பதவி உயர்வை வழங்க வேண்டும், ஆய்வாளர் பதவிகளில் ஏற்படும் பற்றாக்குறையை போக்க மற்ற மாநிலங்களுக்கும் ஆய்வாளர் பதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவும், போராட்ட அறிவிப்புகள் குறித்த கடிதமும் கடந்த மே மாதம் 4ஆம் தேதி மத்திய நேரடி வரி ஆணைய சேர்மனிடம் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளாததால் மே 17ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், மே 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பையும் தெரிவித்தோம். மேலும் ஜூன் 19ஆம் தேதி நாடு முழுவதும் தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனாலும் இதுவரை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாததால் திங்களன்று (ஜூலை 23) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

மேலும் செவ்வாயன்று (ஜூலை 24) வருமான வரி தினத்தை ஊழியர்களும், அதிகாரிகளும் புறக்கணிக்க உள்ளோம். வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமான வரிசோதனை மற்றும் சர்வேக்களில் பங்கேற்க மாட்டார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பர் 12ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நேரடி வசூல் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டது. போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில், ஊழியர்களும் அதிகாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்ததின் விளைவாக அந்த இலக்கை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 11 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு உதவும் வகையில் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் மத்திய நேரடி வரி ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: