கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்களின் நீள, அகலங்கள் 11 அடி விகிதங்கள் என்றால், சிந்துச்சமவெளியில் கண்டறியப்பட்ட கட்டிடங்களின் நீள, அகலங்களும் அதே 11 அடிகள் தான். பாகிஸ்தானிலும், ஈரானிலும் குறிஞ்சி என்ற பெயரில் ஊர்கள் இருப்பது எப்படி? ; ஜெய்ப்பூர், பதேப்பூர், உதய்ப்பூர் என்று வட இந்தியாவிலும், ஏன் ஆப்கன், ஈராக்கிலும் கூட எங்கெங்கும் ‘ஊர்’ எனும் ஒட்டு உள்ளதே ஏன்?. இடைப்பட்ட 3 ஆயிரம் கிலோ மீட்டர் துாரமும், 3 ஆயிரம் ஆண்டு காலமும் என்ன ரகசியத்தை சுமந்து நிற்கின்றன?2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்துடன் தமிழர்களுக்கு இருந்த வணிகத்தொடர்பு, அரிஸ்டாட்டில், அலெக்சாண்டரிடம் சிந்தியாவுக்கு திரமிடாவின் துறைமுக நகர் வழியாகவே படையெடுக்கவேண்டும் என்று சொன்ன ஆலோசனை ஆய்வும், வரலாறும், புனைவுமாய் நம்மை அசரடிக்கிறது, ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ என்னும் தமிழ் மகன் எழுதிய நாவல். நவீன அறிவியல் குலைத்து, காலச்சக்கரத்தின் முன்னும் பின்னுமாய் கதை நகர்வுகள், மொத்தம் 30 குறிப்புகள் என்று கதை வளர்த்தி இருக்கிறார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குஜராத் கடலில் கிடைத்த நங்கூரத்தின் ஒரு பாகத்தையும், 7500 ஆண்டுகள் முந்தைய மற்றொரு நங்கூரமும், முதல் நங்கூரத்தின் மற்றொரு பாகத்தை தேடுவதின் இடையில் தான், மனித சமூகத்தின் 2
லட்சம் ஆண்டுகளும், 50 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட மொழி கிளைத்த வரலாறும் ஊடும் பாவுமாய் பயணிக்கிறது. ஒரு வகையில் நாவலில் வருவது போன்ற, எது உண்மை, எது புனைவு என்று பிரித்தரிய முடியாத ‘பயோகரிபிக்கல்’ வகை நாவல் தான் தமிழ் மகனின், வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள். ‘மனித உயிரினமே, இந்தியாவின் தென்கோடியில் தான் ஜனித்தது, தமிழ் தான் உலகின் ஆதி மொழி. எனவே தான்,உயிரைக் கொடுத்து தமிழை காப்பவனாக, நினைவிலே தமிழ் வாழும் மிருகமாக தமிழன் இருக்கிறான்’ என்பதே ஆசிரியரின் அவதானிப்பு. ஆரிய, திராவிட யுத்தம் பூர்வீகபங்காளிச்சண்டை போன்ற நம்ப முடியாத பல தரவுகளை, மொழியியல், வரலாற்றியல், மானுடவியல் ஆய்வுகள் மூலம் படைத்தளித்துள்ளார் ஆசிரியர். அதனை ஆய்வுநுாலாக இல்லாமல், புனைவெழுத்தில் படைத்தது, தமிழ்மகனின் தனிச்சிறப்பு. 184 பக்கங்களில், 194 ரூபாய் விலையில், இந்த அரிய ஆவணத்தை, சுவாரசியமான புனைவில் ஒரு நாவலை வெளியிட்டிருக்கிறது உயிர்மை பதிப்பகம்.

– சூர்யா, கோவை.

Leave a Reply

You must be logged in to post a comment.