ஈரோடு,
மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட்ட3 ஆவது மாநாடு பவானி காடையம்பட்டி பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கே.எம்.பாலு, டி.சுப்பு, கே.எம்.தமிழ்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ்.வீராசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் வி.நடராசன் அறிக்கை முன்வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எ.நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.சின்னுசாமி, மாவட்ட துணைத் தலைவர் ப.மாரிமுத்து, மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.கோமதி,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில், மனநலச் சேவையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது. பல்நோக்கு அடையாள அட்டையை போதிய நிதி ஒதுக்கி ஊராட்சி அளவில் வழங்க வேண்டும். 21 வகை ஊனத்தையும் அளவீடு செய்து மருத்துவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சட்டப்படி புதிய பயிற்சி வழங்க வேண்டும். 60 சதவிகிதம் ஊனம் உள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும். கல்வி, வேலை போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊழல் இன்றி வழங்க வேண்டும்.குடிசை மாற்று வாரியத்தில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும். ஊனமுற்றோர் அனைவருக்கும் உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக இம்மாநாட்டில் புதிய தலைவராக கே.எம்.பாலு,செயலாளராக டி.சுப்பு, பொருளாளராக என்.சின்னுசாமி மற்றும் 15 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.