மதுரை,
போராட்டப்பாதையே முன்னேற்றப்பாதை என்பதை தொழிலாளிவர்க்கம் பறைசாற்ற வேண்டுமென சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் பங்கேற்க வந்த அவர் ஞாயிறன்று செய்தியாளரிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பங்கு முக்கியமானது. மாநில அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில் மத்திய அரசின் தவறான கொள்கைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்.  வங்கி, இன்சூரன்ஸ், கிராமிய தபால் ஊழியர்கள், மின்சாரம், போக்குவரத்து ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என அனைவரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

மோடி அரசு கடந்த நான்காண்டுகளில் உழைப்பாளி மக்கள் மீது கடுமையான தாக்கு தலை நடத்தியுள்ளது. தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மோடி அரசின் மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், முந்தைய ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என மறு கேள்வி எழுப்பினர் ஆட்சியாளர்கள். தமிழக சட்டமன்றத்திலோ மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் மற்ற பிரச்சனைகளைப் பற்றி பேசினார்கள். செல்லாத நோட்டு நடவடிக்கையால் தொழில், விவசாயம் நாசமாகிவிட்டது. மக்களின் வாழ்க்கையும் மோசமாகிவிட்டது. செய்யாதுரைகளிடமிருந்து 118 கோடி, 120 கோடி ரூபாய் கருப்புப் பணம் பிடிபட்டுள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்.

சரக்கு சேவை வரி மாநில அரசுகளின் நிதியாதாரங்களையும் சிறு தொழில்களையும் அழித்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. வேலைவாய்ப்புகள் குறித்து வாய்ப்பந்தல் போட்டவர்கள். வேலையிழப்பு குறித்து கேட்டால் வாய்மூடி நிற்கிறார்கள். கரைபுரண்டோடும் தனியார் பாசம் இல்லாத வளர்ச்சி பற்றி பேச ஆதாரமற்ற விஷயங்களை அள்ளிவீசுகிறார்கள். சேலம் எஃகு ஆலையையும், துறைமுகங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மற்றொருபுறத்தில் நம்பிக்கையளிக்கக் கூடிய செய்திகள் கேரளாவிலிருந்து வருகின்றன. கேரளத்தில் உள்ள கருவிகள் தயாரிப்பு நிறுவனத்தை (இன்ஸ்ட்ராமென்டேஷன்) மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்க்க முயற்சித்தபோது, கேரள அரசு அதை விலை கொடுத்து வாங்கி, அதை மாநில பொதுத்துறை நிறுவனமாக மாற்றி பாதுகாத்துள்ளது. மேலும் இரண்டு பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்குக் கொடுப்பதற்கு பதிலாக தங்களிடம் கொடுக்குமாறு கேரளஇடது ஜனநாயக முன்னணி அரசு கேட்கிறது. அதற்கு மோடி அரசோ ஏலத்தில் பங்கேற்று வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது. மத்திய அரசிற்கு தனியார் பாசம் கரைபுரண்டோடுகிறது.

இந்தச் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் தமது கடமைகளை சரியான முறையில் உணர்ந்து செயல்படவேண்டும். நமது வாழ்க்கையையும் சீரழித்து வருங்கால தலை
முறையின் எதிர்காலத்தையும் நாசமாக்கும் கொள்கைகளை அடையாளம் கண்டு அவற்றை முறியடிக்க ஊழியர்கள் ஒன்றுதிரளவேண்டும்.  தொழிற்சங்க இயக்கம் கொள்கை எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள குறை பாடுகளைக் களைந்து செயல்படுவதற்கு தயாராக வேண்டும். அரசு ஊழியர் சங்கத்திற்கு இந்த விஷயத்தில் பெரும் பொறுப்பு உள்ளது. உழைப்பாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து சக்தி களையும் முறியடித்து முன்னேற வேண்டும். வரும் நாட்கள் போராட்ட நாட்கள். வகுப்புவாதத்தையும், சாதி வெறியையும் முறியடித்து முன்னேற, உழைப்பாளர் அமைப்புகள் முன்வரவேண்டும். இதனொரு பகுதியாக ஆகஸ்ட் 9, ஆகஸ்ட் 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய இயக்கங்கள் நடைபெற உள்ளன. உழைப்பாளி மக்கள் பங்கேற்க உள்ள இந்த இயக்கங்களில் அரசு ஊழியர்களும் ஒன்றிணைய வேண்டும். தொழிலாளி வர்க்கம் தமது போராட்டத்தை வலுப்படுத்த ஒற்றுமையைக் காட்டவேண்டும். போராட்டப் பாதையே முன்னேற்றப் பாதை என்பதை பறைசாற்றுவோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.