இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களுள்முக்கிய ஆளுமையாய் விளங்கியவர்களுள் சுப்பிரமணிய சிவா குறிப்பிடத் தக்கவர் ஆவார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காக அவர் போராடினார். தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர். 1913-ல் ‘ஞானபாநு’ இதழை நடத்தினார். விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருடனும் ,மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்(நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். பின்னர், வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக் கொண்டே, பட்ட மேற்படிப்பு படித்தார். 1899இல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1902இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சில காலம் ராஜயோகம் பயின்றார்.  1906இல் ஆங்கிலேய அதிகாரி கர்சான் பிரபு, வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார். இந்த பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது.

1906–07இல் திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம் எனும் அமைப்பை, சிவா உருவாக்கினார். இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார்.அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால், இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சுப்பிரமணிய சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார். தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் வ. உ.சிதம்பரனார், சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார். 1908இல் சிதம்பரனாரும் சிவாவும் இணைந்து நெல்லைச் சீமையில் சுற்றுப்பயணம் செய்து சுதந்திர பரப்புரை செய்தனர். 12.3.1908இல் சுப்பிரமணிய சிவா இந்திய சுதந்திரம் குறித்த பரப்புரையில் ஈடுபட்டதை ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் . பின்னர், 2.11.1912இல் விடுதலையடைந்தார்.

பிறகு சுப்பிரமணிய சிவா, சென்னையில் குடியேறி “ஞானபாநு” என்ற மாத இதழைத் தொடங்கினார். இதற்கிடையில் 15.5.1915இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். பல்வேறு சூழ்நிலை காரணமாக, “ஞானபாநு” இதழ் நின்றதன் பின்பு 1916இல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில், சிவா தனது கட்டுரைகளை எழுதிவந்தார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார். 1920இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921இல் துறவி போன்று காவியுடை அணியத் தொடங்கினார். “ஸ்வதந்ரானந்தர்” என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். 17.11.1921இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது, ஆங்கிலேய அரசு வழக்குத் தொடுத்தது. இதில், சுப்பிரமணிய சிவாவுக்கு, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் அங்கு, தொழு நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டார். படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் 12.1.1922இல் விடுதலையானார்.

விடுதலையான சிவா திரும்பவும் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். 1923ஆம் ஆண்டு தொடக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு “பாரதபுரம்” என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை தேசபந்து சித்ரஞ்சன்தாசைக்கொண்டு நடத்தினார். இவருக்கு ஏற்பட்டிருந்த தொழுநோயைக் காரணம் காட்டி, அவர் ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது. ஆயினும் மாட்டுவண்டியில் பயணித்தும் நடந்தே சென்றும் சிவா தனது சுதந்திர பரப்புரையை நிறுத்தவில்லை. நாட்டு விடுதலைக்காக பாரதமாதா ஆசிரமம் அமைத்த சிவா 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய நாற்பத்தோராவது வயதில் மறைந்தார். ”சிவாஜி நாடகம்”, “தேசிங்குராஜன் நாடகம்”,“ நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல்” போன்ற படைப்புகளை படைத்துள்ளார். சுதந்திரப் போராட்ட காலங்களில் சிவாவின் பரப்புரை பிரசித்தி பெற்றவை. ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் இருந்த சுப்ரமணிய சிவா மேடைகளில் தமது எழுச்சியுரையால் மக்களைக் கிளர்ந்தெழச் செய்வார். எனவே இவருக்கு ‘சிவம் பேசினால் சவம் எழும்’ எனும் புகழ் மாலை சூட்டப்பட்டது. இந்தியச் சுதந்திரப் போரில் இடையறாது ஈடுபட்டுச் சிறையேகி அதனால் தொழுநோயாளியாகி மரணத்தைத் தழுவிய சுப்ரமணிய சிவாவின் தியாகம் அழியாப் புகழ் பெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.