மதுரை,
புதிய வேலைவாய்ப்புக்களை பறிக்கக்கூடிய தமிழக அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை திருப்பரங்குன்றத்தில் சனி, ஞாயிறு இருதினங்கள் நடைபெற்றது. இந்தப் பேரவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக்கொடியை மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் ஏற்றிவைத்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனக் கொடியை மாநிலப் பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஏற்றி வைத்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் மணிமேகலை, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் என்.எல்.சீதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுசெயலாளர் ஏ.ஸ்ரீகுமார், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
புதிய வேலைவாய்ப்புக்களை பறிக்கக்கூடிய தமிழக அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்-வாலிபர் அமைப்புகளை ஒன்றிணைத்து வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பன உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.