கோவை குடிநீர் தனியார் மயமாக்கப் படுகிறதா என்கின்ற கேள்விக்கு கோவை மாநகர ஆணையர் திரு விஜய் கார்த்திகேயன் அவர்கள் 25.06.2018 அன்று இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டி பாராட்டுக்குரியது. (http://youth.be/UF4G0ib47pc). காரணம் பிரெஞ்சு நாட்டு பன்னாட்டு நிறுவனமான சூயெஸ் (SUEZ) கம்பெனியின் வலைதளத்திலிருந்து மட்டுமே நமக்கு கிடைத்த செய்திகளை உறுதிப்படுத்தும் முகாமாக ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்கள் கோவையின் குடிநீர் திட்டம் பற்றிய பல செய்திகளை பொது அரங்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் 02.07.2018 அன்று சில பத்திரிகைகளில் கோவை மாநகராட்சி சார்பாக ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு மேலும் சில விவரங்களை தெளிவுபடுத்துகிறது.

மாநகர மன்றம் செயல்படாத நிலையில் மாநகராட்சியின் சிறப்பு அலுவலர் என்ற முறையில் தாம் எடுத்த முடிவுகளை குறைந்தது மாநகராட்சியின் வலைதளத்திலாவது பகிர்ந்திருக்க வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தினால் தான் மாநகராட்சியின் குடிநீர்த் திட்டம் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் மக்கள் மனதில் எழுவதற்கு காரணமாகியுள்ளன. மாநகராட்சி ஆணையரின் விளக்கம் மேலும் சில கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துக்கொள்ளலாம்:

● குடிநீர் விநியோகம் ஏன் தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும்? அதுவும் ஓர் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்? என்ற கேள்விக்கு அவருடைய பதில் நேரடியாக இல்லை. நகரத்தின் தேவையை கணக்கில் கொண்டு, குறிப்பாக அடுத்து 30 ஆண்டுகளை கணக்கில் கொண்டு குடிநீர் தேவையை திட்டமிட வேண்டியது அவசியம் என்றும்; ஆகவே இதற்கு ஒரு உலக டெண்டருக்கு அழைப்பு விட வேண்டிய தேவை இருந்தது என்றும் கூறுகிறார். இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட நான்கு கம்பெனிகள் இந்த டெண்டரில் பங்கேற்றன என்றும் கூறுகின்றார். நமக்கு எழும் மிக அடிப்படையான கேள்வி என்னவென்றால் கடந்த 90 ஆண்டுகளாக கோவை நகரத்தின் குடிநீர் தேவையை திட்டமிட்டு செயல்படுத்திய தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கோ உள்ளாட்சி நிர்வாகத்திற்கோ அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதற்கான தகுதியும் திறனும் இல்லை என்று இவர் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா?

● தோராயமாக 400 மில்லியன் யூரோ செலவில் (அதாவது 3200 கோடி ரூபாய் செலவில்) திட்டமிடப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் 1,50,000 பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்று கூறப்படுகிறது. அப்படியானால் மாநகரத்தில் மீதமுள்ள ஏறக்குறைய 1,20,000 பயனாளிகளுக்கான குடிநீர் சேவையை யார் வழங்குவார்கள்?

● இந்த ஒப்பந்தத்தில் விடுபட்ட 1,20,000 குடி நீர் இணைப்பிற்கான தேவையை மாநகராட்சியே பூர்த்தி செய்யும் என்றால் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் 1,50,000 இணைப்பிற்கான சேவையையும் மாநகராட்சியே ஏன் மேற்கொள்ள இயலாது?

● நகரத்தின் ஒரு பகுதியினருக்கு “24 மணி நேர” குடிநீர் சேவையும் மற்றொரு பகுதியினருக்கு பகுதிநேர குடிநீர் மட்டும் வழங்குவது என்பது சமூக அநீதி, புறக்கணிப்பு ஆகாதா?

● நகரத்தின் எந்தெந்தப் பகுதி மக்களுக்கு 24 மணி நேர தண்ணீர் கிடைக்கப் போவதில்லை என்பதை நகர மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் இல்லையா? எதிர்கால 30 ஆண்டுகால திட்டத்தில் மாநகரத்தின் இந்த ‘புறக்கணிக்கப்பட்ட’ மக்கள் வரமாட்டார்களா? இதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?

● “மேக் இன் இந்தியா” என்று மத்திய அரசு முழங்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான குடிநீரை தனியார் மயமாக்குவது கொள்கை முரணாக இல்லையா?

● தண்ணீர் விநியோகம், அதுஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும், தனியார் கம்பெனிக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? விநியோகத்திற்கான தண்ணீரை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆணையர் தம் பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படி, உறுதிப்படுத்தப்பட்ட தண்ணீரை விநியோகிப்பதுதான் சூயஸ் நிறுவனத்தினுடனான ஒப்பந்தம் என்றால் இதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமோ, மாநகராட்சியோ செய்வதற்கு திறனற்றதா?

● இதற்கு தேவையான கட்டுமானங்களை கட்டமைக்க மாநகராட்சியே செலவு செய்யும் என்று அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மற்றொரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கான தொகையை மாநகராட்சி எங்கிருந்து திரட்ட இருக்கிறது?

● இந்த ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கானது; அதில் முதல் ஆண்டு ஆய்விற்கான காலம்; என்றும், அடுத்த நான்கு ஆண்டுகள் விநியோகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான காலம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிந்த பிறகு தான் CIP – Cost Investment Plan என்னும் மொத்த செலவிற்கான திட்டத்தை வரையறுக்க முடியும் என்று ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் சூயெஸ் நிறுவனம் அறிவித்துள்ள நானூறு மில்லியன் யூரோ என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?

● புதிய குடிநீர் திட்டத்திற்கான பயனாளிகளின் கட்டணத்தை மாநகராட்சி தீர்மானிக்கும் என்று ஆணையர் மேற்படி பேட்டியில் உறுதிப்படுத்துகிறார். பொதுப்பயன்பாட்டில் (Common good) இருக்கின்ற அல்லது இருக்க வேண்டிய அடிப்படை உரிமையான தூய குடிநீருக்கு கட்டணம் செலுத்தி பெற வேண்டியது என்பதே அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கின்ற அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையை மறுப்பதாகாதா? (Right to Life – Art 21)

● அதிலும் இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் இத்திட்டத்தை கொடுப்பதால் தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சி கட்டுப்படுத்த முடியுமா?

உலக அனுபவங்கள் கூறுவது என்ன?

1997ம் ஆண்டு உலக வங்கி “தண்ணீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் பொலிவியாவிற்கு நிதியுதவி அளித்தது. பொலிவியாவின் எல் ஆல்தோ, லா பாஸ் ஆகிய பெரிய நகரங்களிலும் தண்ணீர் விநியோகம் சூயஸ் என்ற பிரன்ச் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் தண்ணீர் கட்டணத்தை 30% உயர்த்திய இந்த கம்பனி, வீடுகளுக்கான குடி நீர் இணைப்பு கட்டணத்தை 440 டாலராக உயர்த்தியது. இது ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியத்தை காட்டிலும் 6 மடங்கு அதிகம். கிணறுகள், குளங்கள் ஏரிகளிலிருந்து மக்கள் தண்ணீர் வேலி அமைத்து தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் பல்வேறு பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. 2003 ஜனவரி மாதத்தில் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 13 அன்று அதிபர் மெஸா, எல் ஆல்தோவின் தண்ணீர் விநியோகம், கழிவு நீர் அமைப்பு ஆகியவற்றை அரசே செயல்படுத்தும் என்று அறிவித்தார்.

பொலிவியா நாட்டில் கொச்சபம்பா என்னும் நகரில் குடிநீர் விநியோகம் 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான பேக்டல் (Bechtel) நிறுவனத்திற்கு 40 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்த தொடங்கிய சில மாதங்களிலேயே பொது மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து இந்த நிறுவனத்தை அந்நாட்டை விட்டே வெளியேற்றினர். காரணம்:

● தண்ணீருக்கான கட்டணம் நூறு முதல் இரு நூறு சதம் உயர்த்தப்பட்டது.

● குறைந்தபட்ச ஊதியமாக நூறு டாலருக்கும் குறைவான வருமானத்தை கொண்ட நாட்டில் நிறைய குடும்பங்கள் குடிநீர் கட்டணமாக 20 டாலருக்கு மேல் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

● பொலிவியா அரசு இந்த ஒப்பந்தத்தை நிரந்தரம் ஆக்கும் வகையில் ‘சட்டம் 2029’ என்னும் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி கொச்சபம்பா நகரின், மழை நீர் உட்பட, அனைத்து நீராதாரங்களின் கட்டுப்பாட்டு உரிமை பேக்டல் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

● இதற்கு எதிராக ஜனவரி மாதம் 2000ஆம் ஆண்டு நான்கு நாட்கள் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இராணுவம் வரவழைக்கப்பட்டது; போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது; நகரம் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது; அரசு அடக்குமுறையை மீறி மக்களின் போராட்டம் தொடர்ந்தது; போராட்டத்தில் ஒருவர் உயிர் இழந்தார்; இருவர் கண்பார்வை இழந்தனர்; 175 பேர் பலத்த காயமுற்றனர். இறுதியில் கட்டண உயர்வினை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது.ஆனால் குடி நீருக்கான ஒப்பந்தம் தொடரும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் எச்சரித்தினர். இறுதியாக ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.

பேக்டல் நிறுவனம் இதோடு நிற்கவில்லை. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் கிடைக்கவேண்டியஇலாபத்தில் ஏற்படவுள்ள நஷ்டத்திற்கு பொலிவியா அரசிடம் 250 லட்சம்டாலர் பணத்தை இழப்பீடாக கோரியது!

இதுஎதைக் காட்டுகிறது என்றால்ஒரு நாட்டின் இறையாண்மையைவிட, பொருளாதாரச் சுதந்திரத்தைவிட, உலகமயமாக்கச் சூழலில் உலகவர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்புதான் உலக அரங்கில் முன்னுரிமைப் பெறுகிறது என்பதுதான்.

உலக சம்பவங்கள், குறிப்பாக தண்ணீரை தனியார்மயமாக்கி வெற்றி கண்டதாக கூறப்படும் பிரான்ஸ் நாட்டில், சூயஸ் நிறுவனம் கொடி கட்டி பறக்கும் நாட்டில் 2008ம் ஆண்டு தனியாரிடமிருந்து தண்ணீர் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாரீஸ் மாநகராட்சியே (Remunicipalisation) குடிநீர் விநியோகத்தை ஏற்று நடத்துகிறது. அப்படியானால் ‘குறைந்த செலவில் நிறைந்த சேவை’ என்ற முழக்கத்தோடு புகுத்தப்பட்ட தனியார் பங்களிப்பு, அது எந்த வடிவத்தில் வந்தாலும், அது தோற்றுவிட்டது என்பது மட்டுமின்றி மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது என்பதும் வரலாறாகும். ஆப்பிரிக்காவையும், லத்தீன், அமெரிக்காவையும் சுரண்டி கொழுத்த அனுபவத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நம்மை சுரண்ட வந்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்க மக்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

 

உருகுவேயில் விரட்டியடிக்கப்பட்ட சூயஸ்

 

பேக்டல் நிறுவனத்தின் அனுபவத்தை வைத்து சூயஸ் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்தத்தை விமர்சிக்க முடியாது என்று கோவை மாநகராட்சி ஆணையர் வாதிடலாம். சரி, சூயஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள குடிநீர் விநியோகம் பற்றிய அனுபவம் என்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

● சூயஸ் (SUEZ)மற்றும் விவெண்டி (Vivendi Environnement) என்று முன்பு அழைக்கப்பட்ட வியோலி என்விராண்மெண்ட் (Veolia Environnnement) என்னும் இரு நிறுவனங்கள்தான் பிரான்ஸின் தண்ணீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள்.

● சூயஸ் நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 1822ஆம் ஆண்டு முதல் உள்ளது. உலகம் முழுக்க 15 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது.

● அதேபோல் வியோலி நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நிறுவனம். நூறு நாடுகளில் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை நிறைவு செய்கிறது. உலகில் 7000 நகரங்களுக்கு குடி நீர் விநியோகம் செய்து வருகிறது.

● இவ்விரு நிறுவனங்களும் குடிநீர் வணிகத்திற்காக ஒப்பந்தமிடும் மாநகராட்சிகளேயே விலைக்கு வாங்கும் பொருளாதார வலிமைக் கொண்டவை!

● ஆனால் இம்மாபெரும் நிறுவனங்களின் பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இன்று இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் மாநகராட்சிகளே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கிய காரணமாகும்.

● மேலும் இந்த தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சம் அம்பலமாகியது. பாரீசின் நகரத் தந்தையாக(Mayor) இருந்தவரான ஜாக்விஸ் சிராக் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வெற்றி பெற்ற பிறகும் பாரீஸின் நகரத் தந்தையாகவும் சில மாதங்கள் தொடர்ந்ததற்கு தண்ணீர் கம்பனிகளிடமிருந்து கிடைத்த கையூட்டுதான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.

● உலக நாடுகளில் தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயிலிருந்து 3 முதல் 5 விழுக்காடு வரை அரசியல்வாதிகளுக்கு கையூட்டாகவும் சில அரசியல் பிரமுகர்களை தங்கள் நிறுவங்களில் உயர் பதவிகளில் பணிபுரிவதாக பொய்யாக பதிவு செய்து அவர்களுக்கு ‘சம்பளமாக’ கொடுத்த சம்பவங்கள் பல அம்பலமாகியுள்ளன!

● லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் நுழைந்த சூயஸ் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அந்நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசுக்கு மனு அளித்தனர். 65 சதவிகித மக்கள் பரிந்துரைத்தபடி அரசியலைமைப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லா இயற்கை வளங்களும் அரசுடைமையாகவே இருக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டங்கள் லத்தீன், அமெரிக்கா முழுவதும் வெடித்தெழுந்தன. தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் போனதால் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டு ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை அரசு துண்டித்தது.

● GDF Suez என்னும் நிறுவனம் தெற்கு ஜெர்மனியில் போடப்பட்ட மேகால் பைப்லைன் (MEGAL Pipeline) ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் ‘Collusion’ என்னும் கூட்டுக்களவு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதால் சூயெஸ் நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஆணையம் 553 மில்லியன் யூரொவிற்கான (4424 கோடி ரூபாய்) தண்டம் விதித்தது.

● சூயஸ் கால்வாயை கட்டி நிர்மாணித்த மாபெரும் நிறுவனம் என்று பெருமையோடு கூறும் மாநகராட்சி ஆணையருக்கு சூயஸ் நிறுவனத்தின் இந்த கசப்பான வரலாறும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.

(குறிப்பு: இந்த கட்டுரையை தொகுத்து வழங்க தேவையான அடிப்படை தரவுகளை தந்து உதவிய மருத்துவர் ரமேஷ், சூழலியல் ஆர்வலர் மோகன் ராஜ், எழுத்தாளர் அமரந்தா ஆகியோருக்கு நன்றி. கர்நாடக அனுபவம் தொடர்பாக தகவல்களை கொடுத்து உதவிய கர்நாடகத் தோழர் சமூக ஆர்வலர் பிரபாகர் ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.) 

பொன் சந்திரன்  

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.