தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக ஞாயி றன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன்,சி.விஜயபாஸ்கர், இரா.துரைக்கண்ணு, வெல்லமண்டி ந.நடராஜன், வளர்மதி ஆகியோர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
டெல்டா பாசனத்திற்காக முதல மைச்சரால் ஜூலை 19 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் திருச்சி முக்கொம்புக்கு வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து திறக்கப் பட்ட நீர் கல்லணைக்கு வந்தது. கல்லணையில் நீரை சேமித்து வைக்க முடியாது. வெள்ளாறு, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளுக்கு மடை மாற்றும் ஆறாகத்தான் கல்லணை கால்வாய் பயன்படுகிறது. எனவே ஞாயிறன்று (ஜூலை 22) டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை பாசனத்திற்காக கல்லணையிலிருந்து காவிரியாற்றில் 7000 கன அடியும் வெண்ணாற்றில் 7000 கன அடியும் கல்லணை கால்வாயில் 1000 கனஅடியும் கொள்ளிடம் ஆற்றில் 2000 கன அடியும் என மொத்தம் 17,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி பாசனப் பகுதிகளில் தண்ணீர் கடைமடை சென்றடைந்த பின், காரைக்கால் பாசனப்பகுதிக்குரிய உரிய நீர் பங்கீடு செய்து அளிக்கப்படும்.
மேலும், கல்லணை கால்வாயில் படிப்படியாக தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டு ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.