திருவண்ணாமலை,
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த விவரங்களை மறைக்க முற்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

தொல்லியல் கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் 28-ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் ஆவணம் – 29 இதழ் வெளியீட்டு விழா திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் சனிக்கிழமை நடந்தது. தொல்லியல் கண்காட்சியை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், “ஈரோட்டை அடுத்த கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிரம்மி எழுத்துக்கள் அமெரிக்காவில் உள்ள பழம்பெரும் ஆய்வுக் கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 350-லிருந்து 375 ஆண்டு காலத்து எழுத்துகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மொழிகளையும் விட தொன்மையான மொழிதமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நம்முடைய பூமி பழமையானது என்று நம்முடைய பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். தமிழரின் நாகரீகம் பழமையான நாகரீகமாகும். பழமையான நாகரீகம் என்று கீழடியை கூறுகின்றனர். கீழடி நாகரீகம் என்பது பழமையானது என்று கூறும்போது, அதனை மறைக்க முற்படுகின்றனர். பண்டைய காலத்தில் போர் தொடுத்து வந்து நம்முடைய வரலாற்று சின்னங்களை அழித் தார்கள். இப்போது நம்முடைய அறியாமையால் அழித்து வருகிறோம். நமது வசிப்பிடம் அருகே உள்ள பழமையான கல்வெட்டுகள், பொருட்களை பார்த்தால்,அது குறித்து அரசு அலுவலர்கள் அல்லது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய வரலாற்றை அழியாமல் பாது காக்க முடியும். நம்முடைய தொன்மை மற்றும் வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்” என்றார்

Leave A Reply

%d bloggers like this: