நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தங்களைப் பாவித்துக்கொண்டு, மற்ற இனத்தவர்களின் உழைப்பின் மூலம் அனைத்து அம்சங்களிலும் முன்னுரிமை  அளிக்கப்பட்ட அதேசமயத்தில் மற்ற இனத்தினர் எல்லாருமே வெறும் ஒட்டுண்ணி பூச்சிகளாகத்தான் கருதப்பட்டார்கள்.

நாம் புரிந்தகொண்டவரையில், இந்துத்துவா கொள்கையைத் தோற்றுவித்தவர். வீ.டி. சாவர்க்கர், ஆவார்.   1939இல் அவர் சாவித்திரி தேவி என்பவரால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஒரு முன்னுரை எழுதினார். 1905இல் பிறந்த மேக்சிமைன் போர்டாஸ்  (Maximine Portaz—1905-1982) என்கிற பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்தவர்,. தன் பிரெஞ்சுப் பெயரை, சாவித்திரி தேவி என மாற்றிக்கொண்டார்.   இவர், அடால்ப் ஹிட்லரால் கலியுகத்தில் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைக் களைவதற்காக கடவுளின் விருப்பத்திற்கிணங்க பூலோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டவர். நாசிசத்தின் பிரச்சாரகரான சாவித்திரி தேவி, மகா விஷ்ணுதான் அடால்ப் ஹிட்லர் என்கிற மனித உருவத்தில் இருக்கிறார் என்று நம்பினார். இந்துக்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சாவர்க்கர் அவருடைய புத்தகத்திற்கு எழுதியிருந்த முன்னுரையில் எழுதி இருந்ததாவது:

“இந்துக்கள் வெகு காலமாகவே வாழ்க்கையில் எவ்விதமான குறிக்கோளுக்காகவும் சுறுசுறுப்பாக இயங்கமுடியாத அளவிற்கு செயலற்றவர்களாக மாறிவிட்டார்கள். இவர்களின் ஒரேயொரு குறிக்கோள், இந்த உலகத்திலிருந்து தப்பி,  “மோட்சத்திற்கு” செல்வது என்பதுதான். ஆனால் எப்படிச் செல்வது? கடவுளுக்கே தெரியும். பல நூற்றாண்டுகளாக நம்முடைய இந்து ராஷ்ட்ரம் அடிமைத்தளையில் தொடர்ந்து இருந்து வருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.”

சாவர்க்கர் ஒரு நாத்திகவாதி. அவருக்கு இந்து மதத்தின்மீது நம்பிக்கை கிடையாது. அவருடைய ஒரே குறிக்கோள், மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு அதன்கீழ் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதேயாகும்.

இந்துயிசம் என்பது அவரைப் பொறுத்தவரை இந்துத்துவா என்கிற தன்னுடைய பெரிய அளவிலான அரசியல் சிந்தனையின் ‘ஒரு சிறு பகுதி’தான்.

சாவர்க்கரின் இந்துத்துவா தத்துவத்தின்படி, ஓர் இந்து இந்தியாவை தன்னுடைய தாய்நாடாகக் (மாத்ருபூமியாகக்) கருதுபவன், தன்னுடைய மூதாதையர்களின் பூமியாக (பித்ருக்களின் பூமியாகக்) கருதுபவன், மற்றும் அவனுடைய ஒரு புண்ணிய பூமியாகக் கருதுபவன். இந்தியாவில் இந்துக்களின் நம்பிக்கைகள் தோன்றிய இடமாக இருப்பதால், இந்தியா, இந்துக்களின் நாடாகத்தான் இருந்தது. இஸ்லாமும், கிறித்தவமும் இந்தியாவிற்கு வெளியே தோன்றியதால், சாவர்க்கரின் இந்து அல்லது ‘இந்து தேசம்’ என்னும் வரையறைக்குள் அவற்றால் எளிதாகப் புகமுடியவில்லை.

மிகவும் இழிவான இனவெறி சிந்தனையில் ஊறிப்போயிருந்த சாவர்க்கர், இந்து என்னும் சொல் எப்படி உருவானது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க பெரிய அளவிற்கு முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்து என்ற சொல் சிந்து நதி என்பதில் உள்ள சிந்துவிருந்து உருவானது என்றுதான் நாம் இதுவரை தெரிந்து வைத்திருக்கிறோம். சிந்து நதியின் அருகே வாழ்ந்த மக்களைக் குறிப்பிட அச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களால் பின்பற்றப்பட்ட மதங்களைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியது. இவர்களின் பழக்க வழக்கங்களைக் குறிக்கும் விதத்தில் தனிப்பட்ட முறையில் எந்தப் பெயரும் கிடையாது, எந்தவிதமான புனித புத்தகமும் கிடையாது,  மதக்குழுக்கள் எதுவும் இதுதொடர்பாக எதுவும் எழுதி வைத்திடவில்லை.

1940-1973வரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், சாவர்க்கரின் சிந்தனைகளை எடுத்துக்கொண்டு, அதனை இன ரீதியாகத் தங்களுக்குச் சாதகமான முறையில் மேலும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.   கோல்வால்கர், நாம், அல்லது வரையறுக்கப்பட்ட நம்முடைய தேசம் (We, or Our Nationhood Defined) என்னும் நூலில் எழுதியிருப்பதாவது: “இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை நிலைநிறுத்திட, யூத இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்திட  வேண்டும் என்று ஹிட்லர் கூறியது ஜெர்மனி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமை பேசுவது அந்த சமயத்தில் உச்சத்தில் இருந்தது. மேலும் ஜெர்மனி நமக்கு அடிப்படையாக பல்வேறு வித்தியாசங்களுடன் உள்ள இனங்களையும் கலாச்சாரங்களையும் ஒரே இனமாக மாற்றியமைத்திட வேண்டும் என்பதையும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக அமைத்துத் தந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்துஸ்தானத்தில் நாம் படிப்பினைகளைக் கற்று, ஆதாயம் அடைந்திட வேண்டும்.”

கோல்வால்கர் இதனை எழுதியபோது, ஹிட்லர் உச்சத்தில் இருந்தார். ஹிட்லர் இப்போது வரலாறாகிப் போய்விட்டார். ஆனாலும், வரலாற்றைத் திரித்துக்கூறிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இந்துத்துவாவாதிகளுக்கு பெரிதாக ஒன்றும் மாறிடவில்லை. இந்திய வரலாற்றில் காலனியாதிக்கத்தின் பிரிவுகள் பல ஆட்சி செய்ததையெல்லாம்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குப்பதிலாக புராதன காலம் ‘நம்முடைய’ காலமாக இருந்தது என்றும், இடையில்தான் ’நாம் தாக்குலுக்கு உள்ளானோம்’ என்றும் நம்மை நம்ப வைத்திட, எண்ணற்ற சொற் புரட்டு மற்றும் போலி வாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.    ஓர் இனம், மற்றோர் இனத்தை ஆக்கிரமிப்பதற்கான செயல்களில் இறந்கி இருந்தது என்கிற விதத்தில் தங்கள் விசாரணைகளைத் தொடர்கிறார்கள். வரலாற்றில் மதரீதியான தேசியவாதங்கள் குறித்து வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் கூறுவதையெல்லாம் அவர்கள் மேற்கோள் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும், மக்களைத் தொடர்ந்து மதரீதியாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே யுத்த களம் தொடர்ந்து இருந்திட வேண்டும் என்பதேயாகும்.

ஒரு சமூகத்தினர், மற்றோர் சமூகத்தினரை வன்முறை மூலமாக அடக்கி ஆண்டார்கள் என்று கூறவரும் அதேசமயத்தில், பெரும்பாலான வன்முறைகள் இயற்கையில் அரசியல்ரீதியானவை என்று அவர்கள் எப்போதுமே குறிப்பிடுவதில்லை. வன்முறை மேற்கொண்டவர்களின் அரசியலை ஒதுக்கித்தள்ளிவிட்டு, இவை அனைத்தும் மதரீதியான செயல்கள் என்று கூறுவது சரியல்ல. ஆனால் இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் இந்துத்துவா மதவெறிக் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவதால், வரலாற்றின் உண்மைகள் அனைத்தையும் சொல்வது என்பது அவர்களின் நிகழ்ச்சிநிரலுடன் ஒத்துப்போகாது.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பல்வேறு ஆழமான மோதல்கள் நடந்துள்ளன.  மாமன்னர் அசோகரையே உதாரணமாக  எடுத்துக்கொள்ளுங்கள்,  பல்வேறு விதமான மோதல் போக்குடன் இருந்த மத மற்றும் தத்துவார்த்தக் குழுக்கள் இணைந்து வாழக்கூடிய ஒரு பொதுவான அடித்தளத்தை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டார். மாமன்னர் அசோகரின் கட்டளைகள், சகிப்புத்தன்மை மீதான படிப்பினைகளைப் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக இதர மதப் பிரிவினர் மீது மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

ரோமிலா தாப்பர் அவர்கள் ‘தேசியவாதம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் மீதான பிரதிபலிப்புகள்’ என்கிற தன்னுடைய அதியற்புதமான கட்டுரையில், எழுதியிருந்ததாவது:

“சையது இப்ராகிம் அவர்கள் இயற்றிய பாடல்களும் பஜனைகளும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு 16ஆம் நூற்றாண்டில் மிக விரிவாக அனைத்துத்தரப்பினராலும் விரிவானமுறையில் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. இப்போதும்கூட அவை பாடப்படுகின்றன.   மொகலாய மாமன்னர்கள் மகாபாரதம், ராமாயணம் உட்பட பலவற்றை சமஸ்கிருதத்திலிருந்து, பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்திடும் புரவலர்களாக மாறி இருந்தார்கள். மதச்சார்பற்ற நாட்டில் மதம் மறுக்கப்படக்கூடாது என்றும், பாரம்பர்யம் என்பது ஆண்டாண்டுகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும், பல்வேறு மதப்பிரிவினரிடமும் உள்ள பன்முகத்தன்மையைக் கொண்டாடிட வேண்டும் என்கிற முறையிலேயே அக்பரின் நம்பிக்கை அமைந்திருந்தது.”

அதியற்புதமான இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை ஆகிய இரண்டுமே இந்து மன்னர்களாலும், மொகலாய மாமன்னர்களாலும் போற்றிப் பாராட்டப்பட்டிருப்பதுடன் அவற்றின் வளர்ச்சிக்காக உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. மத நல்லிணக்கத்தைப் அனைத்து மதப்பிரிவுகளில் உள்ள மத போதகர்களும் (குருக்களும், பிர்களும், ஃபக்கீர்களும்) போதனை செய்திருக்கிறார்கள். முனுதீன் சிஸ்டி, பாபா பரீத், கபீர், குரு நானக் மற்றும் மீரா பாய் (Muinuddin Chishti, Baba Farid, Kabir, Guru Nanak and Mira Bai) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பக்தி இயக்கங்களும், சுஃபி இயக்கங்களும் மதம் மற்றும் சாதிய நிலைப்பாடுகளைக் கடந்தவைகளாகவே அமைந்திருந்தன.

இத்தகைய இந்தியாவில் இவ்வாறு  அதியற்புதமாக நுட்பங்களுடன் கூடிய இந்திய நாகரிகத்தை முழுமையாக கிரகித்துக்கொண்டு, போற்றிப் பாராட்டிட சாவர்க்கர் வெளிப்படையாகவே தவறிவிட்டார்.  கோல்வால்கரும் அந்தப் பாரம்பர்யைத்தையே தொடர்ந்தார். இன்றையவரைக்கும், இந்துத்துவா சிந்தனையாளர்கள், 1947இல் இந்தியா ஓர் இஸ்லாமிய பாகிஸ்தான் என்றும் ஓர் இந்து இந்தியா என்றும் பிரிவினையடைந்திடவில்லை என்கிற உண்மையை, ஏற்க மறுக்கிறார்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகத்தான் உருவானது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதுதொடர்பாக, முப்பது ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வால்கரின் எழுத்துக்களுக்கும்,  பாகிஸ்தானை உருவாக்குவதற்கு உதவி புரிந்திட்ட முகமது இக்பால் என்பவரின் சிந்தனைக்கும்  இடையே உள்ள ஒற்றுமை விசித்திரமானதாகும். இக்பால் ‘மசாப்’ (Mazhab) என்று தலைப்பிட்டுள்ள தன்னுடைய கவிதையில், “மேற்கத்திய நாடுகளுடன் உங்களுடைய நாட்டை ஒப்பிடாதீர்கள். இது இஸ்லாமிய தீர்க்கதரிசியின் நாடாகும். அவர்களுடைய ஒருமைப்பாடு அவர்களின் தேசிய எல்லையின் அடிப்படையிலானவைகளாகும். உங்களுடைய ஒருமைப்பாடு உங்கள் மதத்தின் வலுவில் அடங்கியிருக்கிறது.”

கோல்வால்கரும் ‘தேசிய எல்லை’ என்கிற கருத்தாக்கத்தை நிராகரிக்கிறார். கோல்வால்கர், தன்னுடைய சிந்தனைத் துளிகள் (Bunch of Thoughs) என்னும் நூலில், ”எல்லை தேசியவாதம்” என்பது காட்டுமிராண்டித்தனமானது. ஏனெனில், தேசம் என்பது வெறுமனே அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளின் ஒரு மூட்டை அல்ல. மாறாக அது தேசிய கலாச்சாரத்தை உள்ளடக்கியது. இந்தியாவில் அது ‘புராதன மற்றும் கம்பீரமான’ இந்துயிசத்தை சார்ந்திருக்கிறது.” என்கிறார்.

இவ்வாறு வகுப்புவாதிகளின் சிந்தனைகள் ஒரேமாதிரி இணையாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.  ஆனாலும் இத்தகையவர்களின் சிந்தனைகளை நிராகரிக்கக்கூடிய விதத்தில்தான் மத ரீதியாக பாகிஸ்தானுடன் இணைந்த வங்க தேசம் 1971இல் அதனிடமிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டது. ‘

இந்திய தேசமும் இத்தகையவர்களின் தவறான நம்பிக்கைகளுக்கு எக்காலத்திலும் பலியாகிவிடக்கூடாது. நம் நாடு, எந்தவொரு இனத்தாலோ அல்லது மதத்தாலோ ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. மாறாக, மனிதர்களாகப் பிறந்த அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் உருவானது. பெனிடிக்ட் ஆண்டர்சன் என்பவர் எழுதிய ‘கற்பனை செய்யப்பட்ட சமூகத்தினர்’ (Imagined Communities) என்கிற தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல நாம் ‘ஒரு கற்பனை செய்யப்பட்ட சமூகத்தினராக’ இருந்திட முடியும்.

இந்துத்துவா, இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்தல் என்பதைத்தான் தன்னுடைய தேசியவாதத்தின் அத்தியாவசிய மூலக்கூறாகக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இது, இந்தியாவை உருவாக்கிய பெருமைமிகு சிந்தனையாளர்களின் கருத்துக்களையெல்லாம் எதிர்க்கிறது.

இந்துயிசத்திற்கும் இந்துத்துவாவிற்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக, சாவர்க்கர் (ஒரு வேளை தெரியாமல்கூட) கூறியிருக்கும் கீழ்க்கண்ட கூற்றை நாம் கவனிக்க வேண்டும்: ”இந்துத்துவாவையும், இந்துயிசத்தையும் வேறுபடுத்திப்பார்த்திட நாம் தவறினோமால், அது மிகவும் புரிந்துணர்வின்மைக்கும், பரஸ்பரம் சந்தேகம் கொள்வதற்கும் வழிவகுத்திடும்.” (“Failure to distinguish between Hindutva and Hinduism, has given rise to much misunderstanding and mutual suspicion”.)

இந்துத்துவா மற்றும் இதுபோன்ற இதர மதவெறி  அடையாளங்களும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டியவைகளாகும். இதனை ஒரேநாளில் செய்துவிட முடியாது. ஆனாலும் இதற்கான நடவடிக்கைகளை சிறிய அளவிலாவது நாம் தொடங்கிட வேண்டும். அமைதிக்காவும், சகிப்புத்தன்மைக்காகவும் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், இந்தியா என்னும் நம்முடைய சிந்தனையை நோக்கி நம்மை நெருக்கமாக்கிட கொண்டு செல்லும்.

இந்திய மக்களாகிய நாம், தனிப்பட்டமுறையில் நாம் எவராக இருந்தாலும், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள். இதனை மறுக்கக்கூடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள்தான் உண்மையில் ’தேச விரோதிகள்’.  அவர்களை எதிர்த்திடுவதற்கான தருணம் வந்திருக்கிறது.

  (கட்டுரையாளர், ஒரு சார்ட்ர்ட் அக்கவுண்டண்ட் ஆவார். அகமதாபாத் ஐஐஎம்-இன் முன்னாள் மாணவராவார். )

நன்றி: The Wire

தமிழில்: ச.வீரமணி.

Leave a Reply

You must be logged in to post a comment.