சரக்கு சேவை வரி விகிதம் பல்வேறு பொருள்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. பலபொருள்களின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டன. கடும் விலைவாசி உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள மக்கள் ஜிஎஸ்டியால் மேலும் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகினர். சிறு வர்த்தகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் நடைமுறையால் குழம்பி பாதிப்புக்கு உள்ளாகினர். கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டியின் பெயரால் மக்களின் வருமானம் கடுமையாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே வரி என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியினால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் அரசின் வரி வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது.

வரி நிர்வாகம் தொடர்பான பாலபாடத்தில் நேர்முக வரியை அதிகரிக்க வேண்டும். மறைமுக வரியை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் நேர்மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெரிய செல்வந்தர்களுக்கும் நிலப்பிரபுக் களுக்கும் நேர்முக வரியிலிருந்து மேலும் மேலும் சலுகை அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகை அளிக்கப்படுகிறது, மறுபுறத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ஒட்டச்சுரண்டப்படுகின்றனர். பெட்ரோல்- டீசல் விற்பனை விலையில் பெரும்பகுதி வரியே ஆகும். இந்த நிலையில் ஜிஎஸ்டி பெயரால் பெரும் கொள்ளையடித்துவிட்டு அதன் ஓராண்டு நிறைவு விழாவையும் மோடி அரசு கொண்டாடியது. உணவகப் பண்டங்கள் உள்பட கடும் வரிவிதிக்கப்பட்டு பிறகு சற்று குறைக்கப்பட்டது.

அரசிற்கும் ஜிஎஸ்டிக்கும் எந்தத்தொடர்பும் இல்லாதது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் தேர்தல் நோக்கத்திற்காக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவது என்பது மோடிஆட்சியில் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் சட்டமன்றத்தேர்தலின் போது ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாஜக தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதாலும், அடுத்த ஆண்டுமக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும், பல்வேறு வீட்டு உபயோகப்பொருள்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரிச்சலுகை அளிக்குமாறு கேட்டபோது, மறுத்தவர்கள் தற்போது நாப்கினுக்கு வரிச்சலுகை அளித்துள்ளனர். இதேபோல பல்வேறு பொருள்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரி குறைப்பு என்பது தேர்தலை மனதில்கொண்டதே ஆகும். பெட்ரோலியப் பொருட்களுக்கு கர்நாடகத்தேர்தலின்போது விலைஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம், ஒட்டகத்தின் மீது கடும் சுமையை ஏற்றிவிட்டு, பிறகு கொஞ்சம் குறைத்து பெரும் சலுகை வழங்கிவிட்டது போல காட்டுவதுதான் இப்போதும் நடக்கிறது. ஆனால் மக்கள் ஒட்டகங்கள் அல்ல.

Leave a Reply

You must be logged in to post a comment.