தமிழர் வழிபாட்டு சமயங்களில் மாதவிடாய் தீட்டு என்று எங்குமே சொல்லப்படவில்லை.

ஆணை சிவனாகவும், பெண்ணை சக்தியாகவும் வணங்கும் தமிழச் சமயம் குறிப்பாக சைவத்தில் எங்குமே பெண்ணுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகள், தடைகள் வைக்கப்படவில்லை.

சம்பந்தர் உள்பட பலரை சிவன் ஆட்கொண்ட தருணம் எனச் சொல்லப்பட்டதில்கூட மாதவிடாய் என ஒதுங்கி நின்ற ஒரு பெண்ணை “மாதவிடாய் என்பது அக்கினியே தவிர வேறொன்றில்லை, சிவனுக்கு அதில் ஏதும் தீட்டில்லை” என்று விளக்கம் கொடுத்தார் சம்பந்தர் என்பதில் இருந்தும்…

தூமை தூமை (மாதவிடாய்) என்கிறீரே நீ மட்டுமல்ல உனக்கு வேதம் கற்பித்த குருவே ஒரு தூமைதானே என்கிறார் தமிழ்ச் சித்தர் சிவ வாக்கியர்…

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

தீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே! தூமையான வாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்தத் தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துணருங்கள்.

அதாவது மாதவிடாய் என்பது தீட்டல்ல இன்னொரு உயிரை உருவாக்கும் உயிர்த்தன்மை கொண்டது என்கிறார் சிவ்வாக்கியர்.

ஆகத் தமிழ்ச் சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக பெண்ணை ஆணுக்கு ஈடாகவும், படைப்பில் உயர்வானதாகவுமே பாவித்து வந்திருக்கிறது.

விஷ்வா விஸ்வநாத்

Leave a Reply

You must be logged in to post a comment.