கும்பகோணம்;
தமிழகத்தில் முதல்முறையாக கும்பகோணம் நகராட்சியில் சாக்கடை அடைப்புகளை நீக்கவும், கழிவுகளை அகற்றவும் நவீன ரோபோடிக் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் இழிநிலை போக்கப்பட வேண்டும். பல பேரின் உயிர்களை காவு கொண்ட பாதாளச் சாக்கடை அடைப்புகளை சரிசெய்யும்பணியில் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் அடைப்புகளை சரிசெய்ய நவீன ரோபோட் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

இந்நிலையில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் அருகே சனிக்கிழமையன்று ரோபோட் இயந்திர பயன்பாட்டை நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் முதன்முதலாக கும்பகோணத்தில் சோதனை அடிப்படையில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை சரி செய்ய இந்த ரோபோட் பயன்படுத்தப்படுகிறது. ரோபோடிக் பயன்பாடு திருப்திகரமாக இருந்தால் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த இயந்திரத்தை கும்பகோணம் நகராட்சிக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளது. ரோபோட் அறிமுக நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழ்நாடு நிர்வாக இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் (ஐஏஎஸ்), கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார் (ஐஏஎஸ்), நகராட்சி ஆணையர் உமாமகேஷ்வரி, ஜென் ரோபோடிக்ஸ் இணை நிறுவனர்கள் விமல் கோவிந்த், அருண் ஜார்ஜ், நிகில் என்.பி, ரஷீத் கே, ஆட்டோமேஷன் இன்ஜீனியர் அப்சல், மெக்கானிக்கல் தலைமை வடிவமைப்பாளர் ஜெலிஸ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த Bandicoot robot இயந்திரம் பெருச்சாளி போல, கழிவுநீர் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் வகையில் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் அருண் ஜார்ஜ் கூறுகையில், கேரளத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இத்தகைய நவீன ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. முதன்முறையாக தமிழகத்தில் கும்பகோணம் நகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெருச்சாளி போல கழிவுநீர் அடைப்புகளை துளையிட்டு சரிசெய்வதால், Banticoot robot என பெயரிடப்பட்டுள்ளது.

கழிவுநீரை அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்தாமலும், விஷவாயு தாக்குதல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், தொற்றுநோய் பாதிப்பு ஏற்படாவண்ணம் தடுக்கும் வகையிலும் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலை பறிபோகாத வகையில், அவர்களைக் கொண்டே இயக்கும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பணி இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதகாலம் எங்களது நிறுவன பொறியாளர்கள் தங்கியிருந்து, இயந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது குறித்து நகராட்சி துப்புரவு தொழிலாளிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.