மாதவிடாய் என்பது

ஒரு நிகழ்வு

சளி வெளியேறுவது போல

சிறுநீர் கழிப்பது போல

ஒரு இயற்கை நிகழ்வு

உடல் எத்தனையோ கழிவுகளை

வெளியேற்றுகிறது

சுவாசிப்பது போல இயல்பாக

ஒருவகையில் இது

முதல் உணவு

தாயின் இரத்தம்தானே

சிசுவுக்கு முதல் உணவு

கர்ப்பப்பையின் உட்சுவர் மடிப்புக்களில்

வரிசை வரிசையாய் உணவு

அதை உண்டபிறகுதான்

அனைத்து உயிர்ப் பயணமும் தொடங்குகிறது

பயன்படுத்தாத உணவை

அப்புறப்படுத்துவது

அடுத்த பந்திக்கு அவசியம்

அதற்காகப்

பெண்ணின் உடல் எடுக்கும்

இரத்தப் பிரவேசமே மாதவிடாய்

வலி உயிர்களுக்கு பொதுவானதுதான்

பட்டால் தான் வலி

படாமலும் போகலாம்

வயிற்று வலியும்

பிரசவ வலியும்

பெண்ணின் நிரலில்

பதிவேற்றப்பட்டது

தவிர்க்க முடியாதது

இயல்பானதுதான்

ஆனாலும்

தென்றல் போல் மலர்ந்து

புயலாக மாறி விடுகிறது

பலநேரம் பிரசவத்திற்கு

நிகராகவும் நிகழும்

பெரும்பாலான பெண்கள்

புயலில் சிக்கி சிதிலமான பின்பு தான்

சுழற்சி நிற்கிறது

‘சொல்ல முடியா வேதனை’

என்று

சமூகம் எதற்கெல்லாமோ சொல்கிறது !

இப்படி ஒரு நிகழ்வு

இருப்பதென்பதே

எனது இருபத்தொன்பது வயது வரை

தெரியாது

ஒட்டு மொத்த சமூகமும்

ரகசியம் காத்தது

என்ன அவசியம் ?

ஒரு ஆண் தெரிந்து கொள்ளக் கூடாதென்று

யார் எப்போது தீ்ர்மானித்தது?

என் தாய்

என் மனைவி

என் மகள்

இவர்களின் வலியை

நான் ஏன் அறிந்துக் கொள்ளக் கூடாது ?

என் மனைவி

என் மகள் இவர்களைப் புரிந்து கொள்ள

ஓரளவு வாய்ப்புக் கிடைத்தது

தாயின் வேதனை

அறியாமலேயே கடந்து போனேனே!

கழிவறையை

வீட்டுக்குள் வைத்திருக்கும் சமூகம்

பெண்ணை ஏன் வெளியே உட்கார வைக்கிறது?

மலத்தைவிடவா

துர்நாற்றம் மிக்கது?

கழிவறைக்கே ரகசியமாகச் செல்லும் பெண்ணை

ஏன் ஊரறிய உட்கார வைக்க வேண்டும்

அவளுக்குள் வெட்கத்தை விதைக்கும்

ஒரு விபரீதம்

பெண்களைத் தலைகுனிய வைக்கும்

ஆணாதிக்கத் தந்திரம்

பெண்ணை ஓட அனுமதிக்காது

பிணைத்த சங்கிலியில் இது முதன்மையாது

ஆணாதிக்க சமூகம்

பெண்ணைச் சுற்றிச் சுற்றி

விளாசி இருக்கிறது

நடந்தால் குற்றம்

உட்கார்ந்தால் குற்றம்

விருப்பத்தை வெளிப்படுத்தினால் குற்றம்

சிந்திய உதிரம்

அதனால் ஆனதைவிட

ஆணால் தான் அதிகம்

பெண்ணின் இந்த

ஆயுள் தண்டனையை

எல்லா மதமும் உறுதி செய்கிறது

இதைத் தீட்டு என்பதே

சமூகத்தின் தீட்டு

எப்போது சமூகம்

தீட்டுக் கழித்துக் கொள்வது

இயற்கை

பெண்ணின் கர்ப்பப் பைக்குள்

தடம் பதித்துத் தான்

யுகங்களைக் கடந்து கொண்டிருக்கிறாள்

அதற்காகத்தான் பெண்

தன் இரத்தம் சிந்துகிறாள்

இது தீட்டு அல்ல

தியாகம்

Leave a Reply

You must be logged in to post a comment.