சென்னை;
டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும். அநியாய இன்சூரன்ஸ் கட்டண உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஜூலை 21 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும், கோவை மற்றும் வேலூரில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, செங்குன்றம் ஆகிய இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம் ஆகிய இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஈரோடு, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, கருங்கல், பெரம்பலூர், திருநெல்வேலி, தர்மபுரி, இராமநாதபுரம், கடலூர், சேலம் ஆகிய இடங்களிலும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தை பறிப்பது, வாகனங்களை முடக்குவதை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஈ.எஸ்.ஐ. வசதியை ஏற்படுத்த வேண்டும். வீடற்ற ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆட்டோ வாங்குபவர்களுக்கு அரசுடைமையாக்கப்பட்பட்ட வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து தர வேண்டும். தொழிற் சங்கங்களை அழைத்து பேசி கட்டும்படியான மீட்டர் கட்டணம் அறிவிக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.