திருவனந்தபுரம்;
கேரள பல்கலைக்கழக தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் அனைத்து இடங்களையும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ‘உறுதியான மதச்சார்பின்மை, சமரசமில்லா மாணவத்துவம்’ என்கிற முழக்கத்துடன் இந்த தேர்தலை எஸ்எப்ஐ எதிர்கொண்டது.

தலைவராக திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர் ஷியாமிலி சசிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எஸ்எப்ஐ மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். பொதுச் செயலாளராக பாளையம் சமஸ்கிருத கல்லூரி மாணவர் ஆர்.எஸ்.ஸ்ரீஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எஸ்எப்ஐ திருவனந்தபுரம் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார். துணை தலைவர்களாக ஆலப்புழா ஏஸ்டி கல்லூரி மாணவர் அஜய் எஸ்.பணிக்கரும், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் ஜாண் வில்லியம்சும், அரசுக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவி மீரா எஸ்.மோகனும், இணை செயலாளர்களாக சென்ட் சிரில் கல்லூரி மாணவர் ஜார்ஜ் ஜேக்கப், கருநாகப்பள்ளி அரசு கலைக்கல்லூரி மாணவர் எல்.ஹரிலால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து நிர்வாகிகள் மட்டுமல்லாது 11 செயற்குழு உறுப்பினர் இடங்களும் எஸ்எப்ஐக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே கணக்கு தணிக்கை குழுவுக்கு போட்டியின்றி எஸ்எப்ஐ வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் பதிவான 141 வாக்குகளில் 123 கவுன்சிலர் வாக்குககளும் எஸ்எப்ஐக்கு ஆதரவாக கிடைத்தன. ஏஐஎஸ்எப், கேஎஸ்யு கூட்டணியை தோற்கடித்து எஸ்எப்ஐ இந்த வரலாறு காணா வெற்றியை ஈட்டியுள்ளது. வெள்ளியன்று திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கிய வெற்றிப்பேரணி தலைமைச் செயலகம் முன்பு நிறைவடைந்தது. எஸ்எப்ஐ மாநிலத் தலைவர் வி.ஏ.வினீஷ், மாநில இணை செயலாளர் ஆதர்ஷ் எம்.சஜி, மாவட்டச் செயலாளர் ஷிஜித், தலைவர் பிரவின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: