அருப்புக்கோட்டை:                                                                                                                                                           வரி ஏய்ப்பு புகாரில் எஸ்.பி.கே. குழும நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 450 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலங்கள், நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்பிகே நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர், சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்கள், உரிமையாளர் செய்யாதுரை, அவரது மகன்கள், நிர்வாகிகள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி அனந்தபுரி நகரில் உள்ள செய்யாதுரை வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஒப்பந்த ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில், மொத்தம் 182 கோடியே 99 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் 101 கிலோ தங்கக் கட்டிகள், 2 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருப்புப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையின் முடிவில் எஸ்பிகே குழும நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் 450 கோடி ரூபாய் என்பதை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்நிறுவன நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: