திண்டுக்கல்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செப்டம்பர் 21-ம் தேதி ஈடுபட போவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பதவி உயர்வை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக நடைபெறும் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மாநில அளவிலான கோரிக்கை விளக்கக் கூட்டம் திண்டுக்கல் ஐ.எம்ஏ.ஹாலில் சனியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின், கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில், செய்தியாளர்களிடம் கூறும்போது, நீண்ட நாள் கோரிக்கையான மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு மற்றும் படிகள் வழங்க வேண்டும். இது குறித்து பலமுறை அரசிடம் எடுத்துக் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனையடுத்து அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு செப்டம்பர் மாதம் 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இதில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் டாக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாவட்டந்தோறும் டாக்டர்கள் சந்திப்பு இயக்கம், ஆகஸ்ட் 3வது வாரம் வரை வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள், அப்போதும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் ஆகஸ்ட் 4வது வாரத்தில் புறக்கணிப்பு போராட்டம் அதாவது ரிப்போர்ட் அனுப்புவது புறக்கணிப்பது, கேம்ப்களை புறக்கணிப்பது, அரசு நடத்தும் டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம், மருத்துவ கல்லூரி வகுப்புகளை புறக்கணிப்பது, செப்டம்பர் 1ம் தேதிக்கு மேல் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். உண்ணாவிரதம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாக டாக்டர் செந்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பட்டமேற்படிப்பு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி லட்சுமிநரசிம்மன், அரசு மருத்துவ அலுவலர் சங்க நிர்வாகிகள் ஞானபிரகாசம், கதிர்வேல், அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி ரவிசங்கர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க நிர்வாகி அறம், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், திருலோகசந்தர், சுரேஷ்பாபு, உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நநி)

Leave A Reply

%d bloggers like this: