கோவை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து வெள்ளிக்கிழமை முதல் துவங்கிய லாரிகள் வேலை நிறுத்தத்தில் 4.5 லட்சம் லாரிகள் பங்கேற்றன. இதனால் ரூ.250கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வரவேண்டும். சுங்க கட்டணத்தை ஆண்டிற்கு ஒரு முறை வசூலித்து சுங்கச்சாவடியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமிய கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதையொட்டி உக்கடம் பகுதியில் உள்ள லாரிப்பேட்டை, மதுக்கரை புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோயமுத்தூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவைர் கலியபெருமாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதலே லாரி உரிமையாளர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லாரி புக்கிங் அலுவலகத்தில் புக்கிங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளியன்று துவங்கிய வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி பொருட்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்படும். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கோவை ஒப்பணக்காரவீதி காய்கறி மொத்த வியாபாரிகள் கூறுகையில், வேலை நிறுத்தம் இன்றுதான் துவங்கி இருக்கிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்கள் முன்னேற்பாடாக இரண்டு, மூன்று நாட்களுக்கு கையிருப்பாக தற்போது உள்ளது. ஆனால் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகளின் விலை 30 முதல் 40 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.இதேபோல், லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக லாரி ஓட்டுநர்கள் மட்டுமல்லாது சுமைதூக்குபவர், கைவண்டி தொழிலாளி உள்ளிட்டோரின் அன்றாட பிழைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த கோரிக்கையை முன்வைத்து அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லிவிட்டு பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மட்டும் இது பொருந்தாது என்று சொல்வது ஏற்க முடியாததாக உள்ளது என தெரிவித்தார்.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை, சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது, எங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஈரோட்டில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பே வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய சரக்குகளின் புக்கிங் நிறுத்தப்பட்டு விட்டது. இது எங்கள் வாழ்வாதார பிரச்சனை ஆகும். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். ஏற்கனவே வெளிமாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கே பாதுகாப்பாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பால், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கோழி முட்டை சங்கத்தினரும், எல்.பி.ஜி.டேங்கர்ஸ் உரிமையாளர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

4.5 லட்சம் லாரிகள் :
இப்போராட்டம் தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாரசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் 15 லட்சம் வாகனங்கள் ஓடவில்லை.இதனால் ரூ.600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அத்தியாவசிய பொருட்கள் தேக்கம்அடைந்துள்ளது. பொதுமக்களுக்கு சிறு சிரமங்கள் ஏற்படும். அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும், மணல் லாரி, புக்கிங் ஆபிஸ்லாரிகள், சிறு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேஸ் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் விரைவில் பங்குபெற உள்ளனர். அரசு எங்களை அழைத்துப் பேசினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பற்றி பேச முடியும். மாறாக, போராட்டத்தை மத்திய அரசு முடக்கும் நிலை ஏற்பட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.