கோவை,
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் நோயாளிகளை அழைத்து வர மொத்தம் 34 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.அதேபோல் நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 10 முறைக்கு மேல் 108 ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். இப்படி தினமும் பரபரப்பாக வரும் 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்துவதுதான் வழக்கம். வெள்ளியன்று வழக்கம்போல் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வெளியே திரும்பிச் செல்ல முயலுகையில், அங்கு மருத்துவக் கல்லூரியின் பேருந்துகள் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து வெளியில் செல்ல வழிவிடும்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவ கல்லூரி பேருந்து ஓட்டுநர்களிடம் கோரியுள்ளனர்.

இதில் இருதரப்பினருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் 108 ஆம்புலன்களை மருத்துவமனைக்குள் நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனையையொட்டி சாலையோரத்தில் 108 ஆம்புலன்களை நிறுத்தினர். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், நாங்கள் நேரம் காலம் பார்க்காமல் பொதுமக்களை ஆபத்தான சூழல்களில் சாலைகளிலிருந்தும், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சைக்காக அழைத்து வருகிறோம். அப்படி நோயாளிகளை அழைத்து வந்து அவசர சிகிச்சை பரிவிற்கு கொண்டு சென்று எங்கள்ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவர்களுக்காக காத்திருக்கிறோம். இத்தகைய சூழலில் எங்களுடைய ஸ்ட்ரெச்சரை தரும் வரை நாங்கள் 108 வாகனத்தை மருத்துவமனையில் இருந்து எடுக்க முடியாது. குறைந்தபட்சம் அரசு மருத்துவமனைக்கு வந்தால் 20 நிமிடமாவது நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இப்படி இருக்க நாங்கள் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் போய் நிற்க வேண்டும் என சொல்வது நோயாளிகளுக்கே ஆபத்தாக முடியும், மருத்துவமனை நிர்வாகத்தின் இம்முடிவு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான எங்களுக்கு பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: