வேலூர்,
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டி பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பளுதூக்கும் பயிற்சியாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு தடகள போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப் பட்டன. போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோல், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகள போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,500-ம், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,500-ம், 3ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் வருகிற 23-ஆம் தேதி சென்னை நேருவிளையாட்டு அரங்கில் மாநில அளவில்  நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். மாநில அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: