மதுரை;
அரசுத் துறைகளில் தனியார்மயம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் களம் காண திட்டமிட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன்,பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் மதுரையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரநிதித்துவப் பேரவை ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் மேலும் கூறியதாவது:
பணி சீரமைப்பு என்ற பெயரில் அரசுத் துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணை 56ஐ திரும்பப் பெற வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை இழுத்து மூடும் நடவடிக்கையை கண்டிக்கிறோம். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் நலன்களுக்கு எதிராக உள்ள அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். இக்குழுவை உடனடியாக கலைத்திட வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் .ஊதிய மாற்ற பரிந்துரையில் அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர் ஆகியோரின் ஊதிய முரண்பாடுகளை;f களைந்து உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.கருவூலக் கணக்குத் துறை மற்றும் இதர துறைகளில் டிஜிட்டல் மயம் என்ற பெயரில் நிரந்தர அரசுப் பணியிடங்களை ஒழிக்கப் பார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் சொசைட்டி, சங்கம், கழகம், திட்டம் என்ற பெயரில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் ஆகியவற்றை கைவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறைகளில் தனியார்மயம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் உள்ள சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.