2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக, இந்த வார ஆரம்பத்தில் ஆளுகின்ற அரசாங்கத்திற்குப் பெருமை சேர்க்கிற வகையிலே இந்தியப் பொருளாதாரம் தன்னுடைய உச்சத்தைத் தொட்டதன் மூலமாக உலகின் ஆறாவது மிகப்பெரிய பெரிய பொருளாதாரமாக ஆனது, ஆனாலும் சென்ற ஐந்து மாதங்களிலேயே மிக அதிகமாக கடந்த மே மாதம் 4.87% என்றிருந்த நிலைமையில் இருந்து ஜுன் மாதம் 5% என்பதாக உயர்ந்திருக்கும் பணவீக்கம், வீழ்ச்சியடைந்து வருகின்ற தொழில் உற்பத்தி ஆகியவை குறித்து வருகின்ற செய்திகள் எதிர்காலத்தின் மீது நம்மைக் கவலை கொள்ளச் செய்வதாகவே இருக்கின்றன.

பணவீக்கக் கொள்கை தொடர்பான ஜூன் மாத மதிப்பீட்டில், தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் மத்தியில் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலாக வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25% ஆக உயர்த்தியது என்பது, எதிர்காலத்தில் பணவீக்கத்தை எதிர்பார்த்து எடுக்கப்பட்ட எச்சரிக்கை நடவடிக்கையாகவே இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் வட்டி விகிதங்கள் உயர்ந்ததால் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தைகளுக்கு ஓடிப் போனது மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே வட்டி விகித உயர்வுகளைச் செய்யும் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜூன் மாத பணவீக்கம் 5 சதவீதம் உயர்ந்திருக்கும் நிலையில், எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஆண்டில் இன்னுமொரு வட்டி விகித உயர்வை மட்டுமே மேற்கொண்டு ரிசர்வ் வங்கியால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது நடக்க முடியாத காரியமாகவே இருக்கும்.

எரிபொருள் பணவீக்கம் 7.14 சதவீதம் என்றும், வீடு கட்டுமான பணவீக்கம் 8.45 சதவீதமாகவும், ஆடை மற்றும் காலணி பிரிவில் பணவீக்கம் 5.67% ஆகவும் அதிகரித்திருக்கிறது. வீட்டுச் சாதனங்கள் மற்றும் சேவைகள், உடல்நலம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகிய பிரிவுகளில் முறையே 5,18%, 6.07% ஆக பணவீக்கம் உயர்ந்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரியானது நுகர்வோர் பொருட்களின் விலையை மிகவும் மலிவானதாக்கி விடும் என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை, இவ்வாறு எரிபொருள், மின்சக்தி ஆகியவை தவிர மற்றெல்லா வகையான பொருட்கள் மற்றும் சேவைகளில் அதிகரித்து வருகின்ற பணவீக்கமானது தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

பெரும்பாலான வர்த்தகர்கள் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வருத்தத்தில் ஆழ்ந்தனர். ஆனால் சாதாரணமான மக்களோ ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, மிக அதிகமான தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்குவதில் மிகுந்த மும்முரத்துடன் இருந்தனர்.

அடுத்த ஓராண்டிற்கு சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகமாகவே இருக்குமேயானால், அனைத்து பொருட்களின் உற்பத்தியாளர்களும், சேவை வழங்குநர்களும் தங்களுக்கு ஏற்படுகின்ற அதிக உள்ளீடுச் செலவினங்களைத் தங்களுடைய இறுதித் தயாரிப்புகளின் விலையின் மீது ஏற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள். அதன் மூலம் வீட்டு வரவு-செலவுத் திட்டம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும்.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான தங்களுடைய வட்டி விகிதத்தை பல வங்கிகளும் உயர்த்தி அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்களை அறிவித்திருக்கின்றன. இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக இன்னுமொரு முறை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்குமேயானால், அது பாஜகவின் நடுத்தர வர்க்க வாக்கு வங்கியிடம் நிச்சயமாக பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும்.

இதுவரை, தாராளமான இறக்குமதி ஏற்றுமதி கொள்கைகளைக் கடைப்பிடித்தும், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வழங்கியும் மோடி அரசாங்கம் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்து வந்தது. ஆட்சியின் இறுதியாண்டில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, இந்த ஆண்டில் சந்தைக்கு வருகின்ற கோடைகாலப் பயிர்களுக்கு, சமீபத்தில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கி அரசாங்கம் தன்னுடைய  கொள்முதலை அதிகரிக்க வேண்டியிருக்கும். இவ்வாறான நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், நுகர்வோர் விலை பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றே ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரையிலும் பணவீக்கம் குறைவாக இருப்பதில் முடக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு என்பது பெரும் பங்கை ஆற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பணவீக்கம் என்பது அதிகரித்த தேவைகளால் ஏற்படுவதாக இல்லாமல், எரிபொருள் விலை அதிகரிப்பது, தேய்கின்ற ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களால் ஏற்படுவதாக இருப்பதால், தேவைகளின் மீதான எதிர்மறையான தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதாகவே இந்த பணவீக்கம் இருக்கும். அது தொழில் துறை உற்பத்திக் குறியீட்டு எண் எனப்படும் ஐஐபி மற்றும் பிற பொருளாதாரக் குறியீட்டு எண்களில் மேலும் சரிவை ஏற்படுத்தக் கூடும். இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம் நாட்டின் வெளியில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால் எரிபொருள் விலை உயர்வின் மீது அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. அதேபோல உணவுப் பணவீக்கத்தை மிக நீண்ட காலத்திற்கு, கடந்த நான்கு ஆண்டுகளாகக் குறைவாகவே வைத்திருப்பதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் மோசமாகி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையில் அது நிச்சயம் அரசாங்கத்திற்குப் பாதகமாகவே இருக்கும். பணவீக்கத்திற்கும், பாஜக வெல்ல வேண்டிய முக்கிய தேர்தல் தொகுதிகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய கடுமையான பணி நாட்டின் நிதியமைச்சர் முன்பாக இருக்கிறது.

http://www.catchnews.com/business-economy-news/rising-inflation-can-dampen-modi-s-claim-of-economic-recovery-122487.html

தமிழில்: முனைவர்.தா.சந்திரகுரு

விருதுநகர்.

Leave a Reply

You must be logged in to post a comment.