சென்னை,
சென்னை ரோட்டரி சங்கம் கேலக்ஸி சார்பில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான வினாடி-வினா போட்டி, சென்னையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பரிசுகள் வழங்கிப் பேசுகையில், மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் மையம், அருங் காட்சியகம் அமைக்கப்படும் என்றார். பள்ளிப்பாடத்துடன் பொது அறிவு, வரலாற்றையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த வினாடி-வினா போட்டியில் கோட்டூர்புரம் ஏஎம்எம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சாய் கிருஷ்ணா முதல் பரிசை பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி, கைக்கடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சென்னை ரோட்டரி சங்கம் கேலக்ஸியின் மாவட்ட நிர்வாகி பாபு பேரம், விஐடி பல்கலை கழக கூடுதல் பதிவாளர் ஆர்.கே.மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: