===ஏ.லாசர்===
தமிழ்நாட்டில் கடந்த ஆறுமாத காலமாக மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம் அமலாக்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் மத்திய அரசிடமிருந்து பணம் வரவில்லை, பணம் வந்தவுடன் வேலை தருகிறோம் என அதிகாரிகள் கூலித் தொழிலாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் தூய்மைப்பணி, மரத்திற்கு தண்ணீர் ஊற்றல், தெருவை சுத்தப்படுத்துதல் என்ற பெயரில் பஞ்சாயத்துகளில் 10 பேர், 20 பேருக்கு வேலை தருகின்றனர். ஆனால் அதற்கு உரிய நேரத்தில் சம்பளம் தரப்படாமல் உள்ளது.

வேலை கேட்டால் திருப்பி அனுப்புவதா?
நூறுநாள் வேலைச்சட்டம் ஒன்று உள்ளது. அது இந்தியாவில் சுமார் 20 கோடி கிராமப்புற கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது என்று மத்திய அரசு கண்காணித்து அமல்படுத்துவதில் அக்கறையில்லை. தமிழ்நாட்டில் 95 லட்சம் கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளிகளின் வயிற்றுப் பிரச்சனையாக தமிழக அரசு பார்க்கவில்லை. அதனால்தான் சட்டத்தை அமல்படுத்தி கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பது என்பதற்கு பதிலாக, வேலை கேட்டு வந்தால் பதில் சொல்லி திருப்பி அனுப்புவது என்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மொத்தத்தில் மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டிய மாநில அரசு, சட்டத்தை அமல்படுத்தாமல், சம்பந்தப்பட்ட கிராமப்புற உழைப்பாளிகளை வறட்சியும், வேலையின்மையும் அதிகமாக இருக்கும் காலத்தில் பட்டினியால் சாகடிக்கும் போக்கில் செயல்படுகிறது.

அதேநேரத்தில் மத்திய அரசு மாநிலத்திற்கு என ஒதுக்கும் நிதியை சட்ட விதிகளை மீறி வேறு வகையில் செலவிட திட்டமிட்டுள்ளது. இதன் நோக்கம் சட்டத்தை அமல்படுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஆளும் கட்சியினரும் அதிகாரிகளும் ஆதாயம் பெறும் விதத்தில் அல்லது கமிஷன் அடிக்கும் விதத்தில் பயன்படுத்திட முயற்சி இருப்பதாக தெரிய வருகிறது.

மத்திய நூறு நாள் வேலை சட்டத்தில் துவக்கத்தில், ஒதுக்கப்படும் நிதியில் 90 சதம் தொழிலாளிகளுக்கு; 10 சதம் நிர்வாக செலவிற்கு என்று கூறப்பட்டு இருந்தது. பின்பு அதில் ஒரு திருத்தத்தை மத்திய அரசு செய்தது. கூலிக்கு 60 சதம்; கட்டுமான பொருட்கள் வாங்க, நிர்வாக செலவிற்கு 20 சதம் என மத்திய அரசு திருத்தம் செய்தது. அததான் நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாநில அரசு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மத்திய சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்துள்ளது. மாநில அரசிற்கோ, தமிழக சட்டமன்றத்திற்கோ அப்படி மாற்றி முடிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை.
அப்பட்டமான சட்ட விதி மீறல்கள்

தமிழக சட்டமன்றத்தில் 21-6-2017 இலும் 3-7-2017இலும் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

2017 ஜூன் 21 அறிவிப்பில் ரூ.40,000 – இல் இருந்து ரூ. 63.50 லட்சம் வரையில் தடுப்பணைகளை, மழைநீரை சேகரிப்பதற்காக கட்டுவது; இதற்கு ரூ.250 கோடி ரூபாயை கிராமப்புற வேலைநிறுத்தத் திட்டத்தில் இருந்து எடுப்பது என்றும், இதில் கட்டுமான செலவுக்கு 86 சதமும் தொழிலாளியின் கூலிக்கு 14 சதவீதமும் வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளது.
அதேபோல் கிராமப்புற சுயநிதி குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய விற்பனை மையங்களை உருவாக்குவது; அதற்கு தமிழ்நாட்டில் 1000 கடைகள் கட்டுவது; ஒரு கடைக்கு ரூ.60 லட்சம் வீதம் ரூ.600 கோடி பணத்தை நூறு நாள் வேலைத்திட்ட நிதியில் இருந்து எடுப்பது; அதில் கூலிக்கு 7சதம், கட்டுமான பொருட்களுக்கு 93 சதம் ஒதுக்குவது என்று முடிவு.

இது 21-6-2017 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதேபோல் ஏரி, கண்மாய்களில் தேங்கியுள்ள நீரை பூமிக்குள் செலுத்திட குழி போடுதல் (Recharge pit) 9300 இடங்களில் தலா ரூ.34,000 என நூறு நாள் வேலைத்திட்ட பணத்தில் எடுப்பது என்றும் 110 விதி அறிவிப்பில் உள்ளது. இது சட்டமீறல் ஆகும். மேலும் இந்த வேலைகளை ஒப்பந்ததாரர்களை (காண்டிராக்டர்கள்) கொண்டு செய்வது, எந்திரங்களை பயன்படுத்துவது என்றும் அறிவித்துள்ளனர்.

பெரும் ஏரி, கண்மாய்கள், வாய்க்கால்களை விவசாயக்கூலிகளை வைத்து அதிகமான ஆட்களை வைத்து வேலை செய்யக்கூடாது. இது வாய்மூல உத்தரவு.
இப்படி தமிழக அரசு எல்லா விதிகளையும் மீறி நூறு நாள் வேலைச் சட்ட நடைமுறைகளை முடக்கி, அதன் பலனை விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கிடைக்கவிடாமல் தனி நபர்கள் ஆதாயம் பெறும் விதத்தில் அமல்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசு அனுப்பியும் தொழிலாளிக்கு தராதது ஏன்?
கேட்டால் அம்மாவின் அரசு, ஏழைகளின் அரசு, கூலிக்காரன் நிலை அறிந்து செயல்படும் அரசு என்று தமிழக ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, மத்திய அரசு 2016-2017 ஆம் ஆண்டுகளில் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான தவணைத்தொகைகளை கொடுப்பதில் கால தாமதம் செய்தது. இதை எதிர்த்து 2016 தீபாவளி காலத்திலும் 2017 – தைப் பொங்கல் காலத்திலும் விவசாயத் தொழிலாளர் சங்கம், கலெக்டர் அலுவலகங்களையும் ஆர்டிஓ அலவலகங்களையும் முற்றுகையிட்டு ஆறு மாதம் தரப்படாத சம்பளத்தை வாங்கியது.

அந்த காலத்தில் மத்திய அரசு அனுப்பிய பணத்தில் 2016ல் 240 கோடி ரூபாயையும் 2017ல் 122 கோடி ரூபாயையும் செலவழிக்காமல் வைத்துள்ளது தமிழக அரசு.அத்தோடு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று அனுப்பிய பணம் ரூ.916 கோடியை பெற்றுக்கொண்ட தமிழக அரசு, கிராமப்புற கூலி தொழிலாளிகள் வேலையில்லாமல் செத்துக் கொண்டு இருக்கும் போது அந்த நிதியைக் கொண்டு வேலை தராமல், மத்திய அரசு பணம் தரவில்லை என திருப்பி அனுப்பி, தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலை சட்டத்தின் மீது நம்பிக்கை இழக்கும் காரியத்தை செய்து கொண்டிருக்கிறது.

எனவே தமிழக அதிமுக அரசு சுயநல லாபத்திற்காக அனைத்தையும் செய்வதுபோல் 100 நாள் வேலை திட்டடத்தினையும் முற்றாக முடக்க முயற்சிக்கிறது.
எனவே 100 நாள் வேலைச் சட்டத்தினை முடக்காதே; சட்டத்தை மீறாதே; சட்டத்தை அமல்படுத்து; கூலி தொழிலாளிகளின் வாழ்க்கை சீரழிப்பதை அனுமதிக்க மாட்டோம் என முழக்கமிட்டு வரும் ஜூலை 24 அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டத்தினை நடத்திட விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கட்டுரையாளர் : விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.