தீக்கதிர்

செயற்கை பவழப்பாறைகள் தயாரிக்க அணுமின்நிலையம் ஒப்பந்தம் கையெழுத்து

 கல்பாக்கம்,
கல்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் மீன்வளத்தை பெருக்குவதற்காக ரூ.85 லட்சம் மதிப்பில் பவழப்பாறைகள் தயாரிப்பதற்காக பிளான்ட் நிறுவனத்துடன், சென்னை அணுமின் நிலையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம், சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் மீனவமக்களின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில்,  கல்பாக்கத்தை சுற்றியுள்ள மீனவ கிராமப்பகுதிகளின் கடலில் செயற்கை பவழப்பாறைகளை தயாரித்து, கடலில் இட்டு மீன்வளங்களை பெருக்கி வருகிறது. இந்நிலையில், வெண்புருஷம், தேவனேரி, காட்டுக்குப்பம் மற்றும் நெம்மேலி குப்பம் ஆகிய நான்கு மீனவ கிராமங்களில் மீன் வளங்களை பெருக்குவதற்காக, மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடலில் பவழப்பாறைகளை இட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கியுள்ள சென்னை அணுமின் நிலையம், பவழப் பாறைகளை தயாரிப்பதற்காக பிளான்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை அணுமின் நிலைய இயக்குநர் ரவிசத்தியநாராயணா முன்னிலையில் நடைபெற்றது. எஸ்இஎ நிறுவனத்துடன் இணைந்து விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான தையல் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்ற 67 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை இயக்குநர் ரவிசத்தியநாராயணா வழங்கினார். இந் நிகழ்ச்சியில், அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.