சென்னை,
சென்னையில் வீட்டுவரி சதுர அடிக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை இப்போது விதிக்கப்படுகிறது. ஆனால் சென்னையுடன் இணைந்த புறநகர் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர், புழல், மணலி பகுதிகளில் வீட்டுவரி சதுர அடிக்கு 3.30 வரை உள்ளது. ஆலந்தூரில் மிக அதிகமாக 6 ரூபாய் வரை சதுர அடிக்கு வரி விதிக்கப்படுகிறது.

வீட்டுவரி ஏற்றத்தாழ்வு இருப்பதால் நிறைய இடங்களில் வீட்டுவரியை முறையாக செலுத்தாமல் பலர் பாக்கி வைத்துள்ளனர். சென்னையில் 12 லட்சம் பேர் வீட்டுவரி மற்றும் வணிகவரி செலுத்தும் பட்டியலில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த ஆண்டு 750 கோடி அளவுக்குதான் வரி வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி ரூ.2500 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி உள்ளது. இப்போதைய வரி வருமானத்தை வைத்து கணக்கிட்டால் 2032-ல் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியும் அதுமட்டுமின்றி புதிதாக கடன் பெற்று எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. எனவே சொத்துவரியை உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வீட்டுவரியை மாற்றி அமைக்க உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் இப்போதைய வழி காட்டி மதிப்புபின் படி சொத்து வரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு 10 சதவீதமாக இருந்த சொத்து வழி காட்டி மதிப்பு இப்போது 450 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனாலும் அந்த அளவுக்கு வரியை உயர்த்தாமல் கடை, நிறுவனங்களுக்கு 100 சதவீதம் அளவுக்கு வரி உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். வீடுகளுக்கு 50 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை புறநகரில் ஏற்கனவே வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு குறைந்த அளவில் வீட்டு வரி உயரும். சென்னையின் மைய பகுதியில் இருப்பவர்களுக்கு தான் 50 சதவீத வீட்டுவரி உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.