சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் 4,6,21,22 வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மனிதாபிமானமற்ற முறையில் இடித்து நாசம் செய்யப்பட்டுள்ளது.இடிக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவர்கள் நடுவீதியில் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டும் வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, ராமச்சந்திரன், தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், ராஜா, பிரகாஷ் ,சதானந்தம், வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர்.வீடுகளை இழந்த மக்களுக்கு அடிமனைப் பட்டா வழங்கி போர்க்கால அடிப்படையில் வீடு கட்டி கொடுக்க வேண்டும், பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளை இடித்து தள்ளியதால் உரிய இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “சிதம்பரம் நகரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது மிகவும் கண்டிக் கத்தக்கது. அந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்கு மின்சாரம், பாதாள சாக்கடை, நகராட்சி வரி, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு கூட போதிய கால அவகாசம் கொடுக்காதது வேதனை அளிக்கிறது” என்றார்.

சென்னையில் வீடுகளை காலி செய்த போது மாற்று இடம் வழங்கியதோடு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு வண்டி வாடகையும் அரசு சார்பில் வழங்கிய பிறகே வீடுகளை இடித்தனர். ஆனால், சிதம்பரத்தில் காலை உணவு தயார் செய்து கொண்டிருக்கும்போதே வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். வீட்டை காலி செய்யும்போது எந்த ஒரு சட்ட விதியையும் பின்பற்றாமல் வீடுகளை இடித்து தள்ளியதாகவும் குற்றம் சாட்டினார். சிவகாசியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பில் உள்ள 142 வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, அந்த மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து அங்கு வாழும் மக்களுக்கு மாற்று இடம் தயார் செய்து கொடுக்க காலதாமதம். மாற்று இடம் கொடுத்த பிறகே அந்த வீடுகளை இடித்தார். ஆனால் கடலூர் ஆட்சியர் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டது கண்டிக்கதக்கது.வீடுகள் இடிப்பில் அவசரம் காட்டியதற்கு காரணம், வெள்ள நிவாரண திட்டத்திற்காக வாய்காலின் இருபுறமும் சுவர் எழுப்ப ரூ. 182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை கொள்ளையடிப் பதற்காகவே இந்த மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கியுள்ளனர். சட்ட விதியை பின்பற்றாமல் வீடுகளை இடித்துத் தள்ளிய ஆட்சியர் மீது மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கி குடியிருப்பு கட்டி தரவேண்டும். அதுவரைக்கும் தற்காலிகமாக தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம் என்றும் கே. பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.

பின்னர், சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுத்தார். அப்போது, மாற்று இடம், குடியிருப்பு கட்டிக்கொடுக்கவும், தற்காலிகமாக தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற கே.பாலகிருஷ்ணன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.