நாமக்கல்,
நாமக்கல்லில் சாலை தடுப்பில் மோதி படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு புதுக்கோட்டையில் இருந்து லாரியில் கட்டைகள் ஏற்றி கொண்டு தர்மபுரியை சேர்ந்த மணி (28) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். நாமக்கல், திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் அருகே வெள்ளியன்று அதிகாலை லாரி வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் லாரியின் கேபின் பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. இந்த விபத்தில் உருக்குலைந்த லாரி கேபினின் அடிப்பகுதியில் ஓட்டுநர் மணி சிக்கி படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் கட்டைகள் அகற்றப்பட்டு லாரி ஒட்டுநர் மீட்கப்பட்டார். இதன்பின் உடனடியாக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், நாமக்கல் திருச்செங்கோடு சாலை அருகே தற்போது விபத்து நடந்த இடத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் இதே சென்டர் மீடியன் தடுப்பு சுவற்றில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. தற்போதும் அதே இடத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இப்பகுதி மிகவும் குறுகலாகவும், வலைவாகவும் இருப்பதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.