திருப்பூர்,
சாதி ஆதிக்க சக்திகளின் தலையீட்டில் சத்துணவு ஊழியர்களின் மீது தீண்டாமை தாக்குதல் நடத்தும் போக்குகளை, மாநிலத்தின் வேறெந்த பகுதியிலும் நேராதபடி தடுத்து நிறுத்தி, ஊழியர்கள் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆண்டாள், மாநிலப்பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன் ஆகியோர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் திருமலைக்கவுண் டன்பாளையத்தில் கூடுதல் பொறுப்பில் சமையலர் பணிக்குச் சென்ற பாப்பாள் என்ற சத்துணவு ஊழியரை உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்திகள் தலையிட்டு, சமையல் செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தி அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றி அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சட்டப்படி உறுதியுடன் செயல்பட வேண்டிய ஒன்றிய ஆணையர், பாப்பாளுக்கு நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக உறுதியுடன் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாறாக, சாதி ஆதிக்க சக்திகளின் நிர்பந்தத்துக்குப் பணிந்து பாப்பாளுக்கு வழங்கிய பணி ஆணையை ரத்து செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் ஆணையாளரிடம் பேசி மீண்டும் அடுத்த நாள் அதே பள்ளியில்பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டது. எனினும் மீண்டும் பிரச்சனை தீராத பட்சத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன், மாவட்டத் தலைவர் ஜி.சுமதி, மாவட்டச் செயலாளர் ஆர்.ராமசாமி உள்பட மாவட்ட நிர்வாகிகள் தலையிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உடன் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமையலர் பாப்பாளை மீண்டும் அதே திருமலைகவுண்டன்பாளையம் பள்ளியில் நிரந்தரமாக பணியாற்ற உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் அதே பள்ளியிலேயே பணியாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சத்துணவு ஊழியர் மீது சாதிரீதியான தீண்டாமைத் தாக்குதல் நடந்தபோது திருப்பூர் மாவட்ட, ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட ஊழியருக்கு நியாயம் கிடைக்க முயற்சி மேற்கொண்டதற்கு மாநிலத் தலைமை பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறது. இது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்திற்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழகத்தின் வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சத்துணவு ஊழியர்கள் மீது இதுபோன்ற தீண்டாமைத் தாக்குதல்கள் இருந்தால் அதை ஆய்வு செய்து உடனடியாகக் களையவும், சத்துணவு ஊழியர்கள் மீது எவ்விதமான தீண்டாமை தாக்குதல்களும் நடைபெறாமல் அவர்கள் பணி செய்வதற்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.