திருப்பூர்,
அரசுப் பள்ளி சமையலர் பாப்பாளிடம் சாதி துவேசத்துடன் தீண்டாமை வன்கொடுமை நிகழ்த்திய சாதிய ஆதிக்க வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனர் அ.சு.பவுத்தன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில்ராசு, காட்டாறு இதழ் குழுவைச் சேர்ந்த கு.செந்தில்குமார், த.பெ.திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர் முத்துக்குமார், தி.க.மாநகர செயலாளர் மா.கருணாகரன், வி.சி.க. மாவட்ட செய்தித் தொடர்பாளர் இரா.மாதன், தேசிய சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன், தலித் விடுதலைக் கட்சி மாநில கொள்கைப்பரப்புச் செயலர் என்.பி.ஆறுமுகம், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலர் பி.துரையரசன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் விக்டர் மனோவா உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்புக் கூட்டமைப்பினர் வெள்ளியன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றனர்.

அங்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறளைச் சந்தித்து, அவிநாசி ஒன்றியம் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் சமையலர் பாப்பாளுக்கு நிகழ்த்தப்பட்ட சாதிய தீண்டாமைக் கொடுமை குறித்து மனு அளித்தனர். இம்மனுவில், மேற்படி கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய சமூகப் பாதுகாப்பு வழங்கிட சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். திருமலைக்கவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சாதியப் பாகுபாட்டை வலியுறுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இதர சாதி மாணவர்களுக்கும், சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிளாஸ்டிக் குடத்தில் தனியாகதாழ்த்தப்பட்ட மாணவர்கள் குடிப்பதற்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சாதிய பாகுபாட்டை இதுவரை நடைமுறையில் கடைப்பிடித்து வந்த அப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பாளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழங்க வேண்டிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஊழியராக இருந்து கொண்டு தனது கடமையைப் புறக்கணித்து தீண்டாமையை ஆதரிக்கும் வகையில் பாப்பாளுக்கு உடனடியாக பணியிட மாறுதல் வழங்கிய அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரம்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்:
மேற்படி தீண்டாமை ஒழிப்புக்கூட்டமைப்பினர் மனு அளித்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், அவிநாசி ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துசாமி, அ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாதனைக் குறளிடம் கட்சியின் சார்பிலும் இப்பிரச்சனை தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். இதில் தீண்டாமைக் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டபடி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன் தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக மேற்கண்ட பகுதியில் தீண்டாமை எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையை வலுவாக மேற்கொள்வதுடன், தீண்டாமைக்கு ஆதரவாக உள்ள அரசுத் துறை அதிகாரிகளை உடனடியாக பணியிட மாறுதல் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்தும்படியும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.