ஈரோடு,
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கும், அதற்கான நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, பாம்பகவுண்டர் பாளையம் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. பிஜிபிஎம் பொது நல அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு அருகில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர ஆம்னி வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டு குழந்தை ஒன்றுக்கு மாதம் ரூ.500 வீதம் இந்நிறுவனம் பணம் வசூலித்து வருகிறது. அதேநேரம், பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனம் என்பதால், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும், வாகன அனுமதி முதலியான சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், பள்ளி குழந்தைகளை வாகனத்தில் இருந்து ஏற்றி, இறக்க உதவியாளர், வாகனத்திற்கு உரிய அனுமதி மற்றும் வாகன ஓட்டுநர் குறைந்தபட்சம் 5 வருடம் பள்ளி வாகனஓட்டுநராக இருந்திருக்க வேண்டும் போன்ற எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. மேலும், ஒரே வாகனத்தில் 18 குழந்தைகள் வரை அழைத்து வரப்படுகின்றனர். இதேபோல், எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டால் குழந்தைகளின் மருத்துவ செலவு மற்றும் இழப்பீடு ஆகியவற்றை அரசு ஏற்குமா? அல்லது தொண்டு நிறுவனம் ஏற்குமா என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிஜிபிஎம் அறக்கட்டளை நிறுவனம் மேற்குறிப்பிட்ட பள்ளியை தத்தெடுப்பதாக அறிவித்து அதற்கான நிகழ்ச்சி சனியன்று (ஜூலை 21) நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆகியோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குழந்தைகளின் நலனில் சிறிதும் அக்கறையில்லாத ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனத்திடம் அரசுபள்ளியை ஒப்படைக்கும் முடிவிற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

– (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: