சூரத் :

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் குஜராத் மாநிலம் சூரத்தில் நகரில் 6 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு, அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரிந்து வந்த 40 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று குஜராத் நெசவாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளிடையே மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு வரும் அறிவித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி நள்ளிரவில் அறிவித்ததோடு, புதிய இந்தியா பிறந்திருப்பதாக அறிவித்தார். ஆனால் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கான எந்த முன் ஏற்பாடும் இன்றியும், தெளிவான வரையறையின்றியும் அவசர கோலத்தில் அமலாக்கம் செய்யப்பட்டது. இதனால் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்தது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர்த்து நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறுகுறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. சிறுதொழில்களின் அழிவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட துவங்கின.

இந்நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில் உள்ள நெசவுத்து தொழில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) அமலாக்கத்தால் சீர்குலைந்து  ஒரு வருடமாகியும் இன்னும் சீரடையவில்லை. இதனால் சூரத்தில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்த 40,000க்கும் அதிகமான ஒடிசா மாநில தொழிலாளர்கள் வேலையின்றி அன்றாட உணவிற்கே தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் குஜராத் நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சூரத்தில் ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் அம்மாநில முதல்வர் நவீன் பட்னாய்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர் மற்றும் சில அமைப்புகள் மூலமாகவும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸின் தகவலின்படி மொத்தமாக 4 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெசவு இயந்திரங்கள் விற்பனைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 50% சிறுகுறு நெசவுத்தொழில்கள் மூடப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது. சூரத் நகரம் கடந்த ஆண்டு மட்டும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி)யால் சுமார் 25,000 கோடி ரூபாய் அளவிலான வருவாயை இழந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.